×

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது: நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் ‘ஹவுஸ்புல்’…கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

நெல்ைல: தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால் நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு இன்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களிலும் இடங்கள் முழுமையாக நிரம்பி விட்டன. கடந்த வியாழன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அடுத்த நாள் புனிதவெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இந்த 2 நாள் விடுமுறையை தொடர்ந்து நேற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் பணி செய்பவர்கள், கடந்த வியாழனன்று தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் புறப்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த வியாழனன்று மட்டும் சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு இன்று மாலை முதல் திரும்புகின்றனர். இதற்காக சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு நெல்லையில் இருந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்திலும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டன. அரசு விரைவு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்களிலும் அனைத்து இடங்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதேபோல் நெல்ைல, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து இன்று மாலை 4 மணி முதல் தேவைக்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளனர். சென்னை, திருப்பூர். கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக வரும் பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக நெல்லை, குமரி மாவட்டங்களில் அதிகபட்சம் 50 பஸ்கள் வரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே ரயில்களில் செல்வதற்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் வருகிற 20ம் தேதி வரை அனந்தபுரி விரைவு ரயில், சென்னை-குருவாயூர் விரைவு ரயில், சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….

The post 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது: நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் ‘ஹவுஸ்புல்’…கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chennai ,Nellaila ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...