×

நில அபகரிப்பு புகாரில் சிக்கிய வக்கீல்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து வைத்த பார்கவுன்சிலின் முடிவு ரத்து: மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கிராமத்தை சேர்ந்த வரதம்மாள் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஜெகநாதன் நிர்வகிக்க அதிகாரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், நாகராஜ் என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004ல் கடன் வாங்கியுள்ளார். இந்த விஷயம் தெரிந்தவுடன் ஜெகநாதன் விசாரித்ததில் இடத்தை அபகரித்ததில் நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம், ரவி, முத்துசாமி என்ற 3 வக்கீல்களும் மோசடிக்கு உதவியது தெரியவந்தது.இதையடுத்து, 3 வக்கீல்கள் மீதும் தமிழ்நாடு பார்கவுன்சிலில் ஜெகநாதன் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த பார்கவுன்சில் 3 வக்கீல்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 2019 செப்டம்பர் 3ம் தேதி அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், பார்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் தலைமையில் குழுவை அமைத்து வக்கீல்கள் மீதான விசாரணையை நடத்த வேண்டும் எனக்கோரி ஜெகநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வக்கீல்கள் ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் மீதான விசாரணையை பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 2020 அக்டோபரில் ஜெகநாதன் காலமானார். இதையடுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சார்பில் பார்கவுன்சிலில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெகநாதனின் சட்டபூர்வ வாரிசுகளான எங்கள் மனுவை ஏற்று வக்கீல்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.  இந்த கோரிக்கையை நிராகரித்த பார்கவுன்சில் வக்கீல்கள் மீதான நடவடிக்கையை முடித்துவைத்தது. இதை எதிர்த்து ஜெகநாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளையபெருமாள் வாதிடும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மரணமடைந்தால் அவர் மீதான வழக்கை முடித்துவைக்க முடியும். ஆனால், புகார் கொடுத்தவர் மரணமடைந்துவிட்டால் அந்த புகாரை ரத்து செய்துவிட முடியாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீதான விசாரணையை புகார்தாரர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக முடித்துவிட முடியாது. புகார்தாரரின் வாரிசுகள் புகார்தாரருக்கு பதிலாக வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் இதை உறுதி செய்துள்ளது. எனவே, வக்கீல்கள் ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் மீதான ஒழுங்கு  நடவடிக்கை விசாரணையை முடித்துவைத்த தமிழ்நாடு பார்கவுன்சிலின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஜெகநாதனின் வாரிசுகளான அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் மனுக்கள் ஏற்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வக்கீல்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தொடங்க வேண்டும். தமிழ்நாடு பார்கவுன்சில் புதிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்….

The post நில அபகரிப்பு புகாரில் சிக்கிய வக்கீல்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து வைத்த பார்கவுன்சிலின் முடிவு ரத்து: மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Parkouncel ,Chennai High Court ,Chennai ,Darmapuri district ,Athiyamankotta ,Varadammaal ,Jeganathan ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...