×

கடந்த 10 நாட்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கல்: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

சென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  நேற்று வெளியிட்ட அறிக்கை: 2020ம் ஆண்டில் நிகழ்ந்த நிவர், புரெவி புயல், 2021, ஜனவரி மாதத்தில் எதிர்பாராது பெய்த அதிக கனமழையினால் தமிழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. 2020-21ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் விரைவில் இழப்பீட்டுத்தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்குத்தொகையாக மொத்தம் ரூ.1,940 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,118 கோடி பங்குத் தொகையில்,  இதுவரை ரூ.660 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2020-21ம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை, கோடை நெல், உளுந்து, பச்சைப்பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிர்களில் மகசூல் இழப்பினால் பாதிப்படைந்து, தகுதி வாய்ந்த 1,15,947 விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.183 கோடியே 13 லட்சம் இழப்பீட்டுத்  தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் நவரை, கோடை நெல், உளுந்து, பச்சை பயறு, நெல் தரிசில் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கும்,  கரூர், திருப்பூர், அரியலூர் திண்டுக்கல், காஞ்சிபுரம்,  தூத்துக்குடி, செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் உளுந்து பயிருக்கும் காப்பீட்டு இழப்பீட்டுத்  தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கையினால்,  2020-21ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளில், இதுவரை, (14ம் தேதி வரை) ரூ.2,285  கோடி இழப்பீட்டுத்  தொகை, தகுதி வாய்ந்த 10 லட்சத்து 89 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.200 கோடி இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post கடந்த 10 நாட்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கல்: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : MRK Panneer Selvam ,CHENNAI ,Agriculture Minister ,MRK Panneerselvam ,Nivar ,Purevi ,MRK .Panneer Selvam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...