×

திருத்தணி முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

திருத்தணி: சித்திரை பிறப்பை முன்னிட்டு, திருத்தணி முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முதல்நாளை முன்னிட்டு, திருத்தணி மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்  நடத்தப்பட்டது. இதன்படி, நேற்று காலை திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் 1008 பால்குடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவற்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து, திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, பால்குடம் எடுப்பதற்காக விரதம் இருந்து பக்தர்களின் தலையில் பால்குடத்தை தூக்கிவைத்தார்.இதன்பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க 1008 பால்குட ஊர்வலம் ஆறுமுகசாமி கோயில் தெரு, பெரிய தெரு, ஜோதி சாமி கோயில் தெரு, மபொசி சாலை மற்றும் லட்சுமிசாமி கோயில் தெரு வழியாக சென்று திருத்தணி மலைக்கோயில் படிக்கட்டு வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முருகர், வள்ளி, தெய்வானைக்கு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர், தன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருத்தணி நகர பொறுப்பாளர் வினோத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல்,  திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் 1008 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்….

The post திருத்தணி முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Balkuda ,Thirutani Murugan ,Sitrithani ,Balkuta ,Thiritani Murugan ,Tiritani Murugan ,
× RELATED சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாயகர் கோயிலில் பால்குட விழா