×

இ-சேவை முறையில் வாரிசு சான்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் 1000 எழுத்துகளில் அதற்கான காரணம் தெரிவிக்கும் சுற்றறிக்கை: அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை:  சேலத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கடந்த 202ல் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் கோரி அரசின் இ-சேவை மூலம் அவரது தாயார் சின்னப்பிள்ளை என்பவர்   அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவாக அளிக்கவில்லை. நேரடியாக வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும்போது, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் 2019ம் ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையில், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ளும் நேரடி விசாரணையில் அளிக்கப்படும் அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்து வட்டாட்சியர்கள்  சான்றிதழ் வழங்குவார்கள்.  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்  குறிப்பிட்ட காரணங்களுக்காக சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று விளக்கமாக அளிக்கப்படும். தற்போதுள்ள இ- சேவை முறையில் முழுமையாக எந்த காரணமும் தெரிவிக்கப்படுவதில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.என்.சி. கவுசிக் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், இ-சேவை மூலமாக வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அதற்கான காரணங்களை 100 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற வரையறை 1000 எழுத்துகள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற கருத்தினை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுகள் என தெரிவித்தார்….

The post இ-சேவை முறையில் வாரிசு சான்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் 1000 எழுத்துகளில் அதற்கான காரணம் தெரிவிக்கும் சுற்றறிக்கை: அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Salem ,Chinnabaiyan ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...