×

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரையின் மணிமகுட சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக 12ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது.  மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான ‘திக்குவிஜயம்’ நேற்று நடைபெற்றது.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. திருக்கல்யாணத்தை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேற்று நள்ளிரவு முதலே மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை காண தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று இரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்க கவசத்துடன், சிவப்பு பட்டு உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார். சுந்தரேச பெருமாள் வெண்பட்டு, பிரியாவிடை பச்சை பட்டும் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேசுவரர் காசியாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். இதையடுத்து மேலக்கோபுர வாசலில் சுந்தரேச பெருமாளுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் மணமேடைக்கு வந்து எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் மேடைக்கு வந்தார். மீனாட்சியம்மனின் இடதுபக்கம் பவளக்கனிவாய் பெருமாளும், வலது புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் வீற்றிருந்தனர். காலை 10.05 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் தொடங்கின. மீனாட்சியாக சிவாச்சாரியார் பட்டரும், சுந்தரேசுவரராக சிவாச்சாரியார் பட்டரும் இருந்தனர். மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வர் பட்டரும், மீனாட்சியம்மன் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். பின் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டது. பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்தார். பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க தாலியை பட்டர்கள் மூன்று முறை பக்தர்கள் முன்பு எடுத்து காட்டினர்.  காலை 10.45 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதசுரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது விண்ணுலகத்தில் இருந்து தேவர்கள் மலர் தூவி வாழ்த்துவதை போன்று வண்ண மலர்கள் சாமிகள் மீது கொட்டப்பட்டன. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர். அதன்பின்பு சுந்தரேசுவரருக்கும், அம்மனுக்கும் தங்க கும்பாவில் சந்தனமும், தங்க செம்பில் பன்னீரும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்க தட்டில் கற்பூரம் வைத்து, மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசப் பெருமானுக்கும் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தேறியது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமானும் மேடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோயிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானையும், பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன்-சுந்தரேசுவரர் அருள் பெற்றனர். மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வருகின்றனர். சித்திரை திருவிழாவில் நாளை (15ம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று மாலை புறப்படுகிறார். வழி நெடுக உள்ள சுமார் 456க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், 16ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு வைகை ஆற்றில் இறங்குகிறார்….

The post மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman ,Sundereswarar ,Thirukalyanam Kolakalam ,Madurai Chitrai Festival ,Madurai ,Meenakshiyamman-Sundereswarar Thirukalyanam ,Manimakuda Chitrai Festival ,Masi ,Meenakshiyamman-Sundereswarar Thirukalyanam Kolakalam ,
× RELATED கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு