×

திருப்பதி ஏழுமலையானுக்கு முதன்முறையாக விக்டோரியாவில் ₹5 கோடி மதிப்பு நிலம் நன்கொடை-வெளிநாடு வாழ் இந்தியர் வழங்கினார்

திருமலை : திருப்பதி ஏழுமலையானுக்கு முதன் முறையாக விக்டோரியாவில் உள்ள ₹5 கோடி மதிப்பிலான நிலத்தை வெளிநாடு வாழ் இந்தியர் நன்கொடையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக விவசாய மற்றும் விவசாயம் சாராத நிலங்களின் வடிவில் உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரத்து 889 ஏக்கராக உயர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது. கடந்த 1974ம் ஆண்டு முதல் நவம்பர் 11, 2020ம் ஆண்டு வரை மொத்தம் 1,128 நிலங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக பக்தர்கள் மூலம் வந்துள்ளது. அதில் 172 விவசாய நிலங்கள், மீதமுள்ளவை 815 விவசாயம் அல்லாத நிலங்கள் உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் பிசினஸ் நெட்வொர்க் கேபினட் வேர்ல்டு (பிஎன்சி வேர்ல்டு) அறக்கட்டளை துணை தலைவர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை குழு உறுப்பினராக உள்ள சங்கர் என்பவரது நண்பர், சீஷெல்ஸில் குடியேறியுள்ள வெளிநாடு வாழ் இந்தியரான ராமகிருஷ்ண பிள்ளை, சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியாவில் உள்ள தனது 4 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழங்கினார். இதனை கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி பெற்றுக்கொண்டார்.சீஷெல்ஸில் இந்து மக்கள் அதிகளவில் உள்ளனர். அங்குள்ள இந்து சமூகம் ஏற்கனவே விநாயகர் கோயிலைக் கட்டியுள்ளனர். இந்த கோயில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. எனவே அதேபோன்று தற்போது வழங்கப்பட்ட சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியாவில் உள்ள ₹5 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்ட வேண்டும் என ராமகிருஷ்ண பிள்ளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் கேட்டு கொண்டார்.அதற்கு தர்மா கூறுகையில், ‘வெளிநாட்டிலிருந்து நிலம் நன்கொடை பெறுவது இதுவே முதல் முறை. அங்கு கோயில் கட்டுவது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.பின்னர், அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர் கூறியதாவது: பிஎன்சி வேர்ல்டு அறக்கட்டளையின் மூலம் சீஷெல்ஸில் தலைநகர் விக்டோரியாவில் 4 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெருமாள் கோயில் கட்டுவதற்கான அனைத்து செலவையும் ஏற்பதாக நாங்கள் தெரிவித்துள்ளோம். தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவுக்குப் பிறகு இதற்கான ஆவணங்கள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்படும்.இதேபோன்று கம்போடியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் எங்கள் அறக்கட்டளை மூலம் நிலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளனர். மேலும், ஏழுமலையான் கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை அழைத்துச் செல்வதற்காக ₹65 லட்சம் மதிப்புள்ள 10 பேட்டரி பேருந்துகள் தற்போது தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக 200 நாற்காலிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானத்திற்கு ₹12 லட்சம் மதிப்புள்ள மினி பேட்டரி பேருந்துகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் நன்கொடையாக வழங்கப்படும். இதன் வரவேற்பை பொறுத்து மேலும் 10 வாகனங்கள் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post திருப்பதி ஏழுமலையானுக்கு முதன்முறையாக விக்டோரியாவில் ₹5 கோடி மதிப்பு நிலம் நன்கொடை-வெளிநாடு வாழ் இந்தியர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezumalayan ,Victoria ,Tirupati Ethumalayan ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா