கீவ்: குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் படுகொலை மற்றும் பலாத்கார குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரஷ்யப் படைகளின் மீது 6,036 போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போரை தொடங்கி 45 நாட்களுக்கு மேலான நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களை ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. குறிப்பாக புச்சா நகரில் மட்டும் குறைந்தது 403 பொதுமக்கள் ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டனர். இதனை ஐ.நா உட்பட சர்வதேச நாடுகள் கடுமையாக கண்டித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால், அவை போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன’ என்று கூறினார். அதேபோல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘புச்சாவில் நடந்துள்ள இந்த கொலைகள் இனப்படுகொலைக்கு சமமானது’ என்றார். உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சமீபத்திய குழந்தை இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஒவ்வொரு குழந்தையின் படுகொலைக்கும் ஒரு ரஷ்ய வீரர், ஒரு தளபதி மற்றும் அந்நாட்டு அதிபர் புடின் ஆகியோர் பொறுப்பாவார்கள். இந்த குற்றங்கள் மறக்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் மீண்டும் தாக்குதலை நடத்தி வரும் அதேநேரம், வடகிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் படுகொலைகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் நடந்த படுகொலைகள் குறித்தும் உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அந்த நகரத்தில் வீசப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைன் படைகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் வழக்கறிஞர் குழு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யப் படைகளால் 6,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் நடந்துள்ளன. பொதுமக்களை படுகொலை செய்தல், பெண்கள் பலாத்காரம், குழந்தைகளை கொல்லுதல் போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் கற்பழிப்பு உட்பட இப்போது விசாரணையில் உள்ளன என்று உக்ரைனின் வழக்கறிஞர் அலுவலகம் நேற்று வெளிப்படுத்தியது. கடந்த பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6,036 போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று லிதுவேனியாவின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ‘ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். புடினின் வீரர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ரஷ்யப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்குற்றங்கள் தொடர்பான பதிவு மற்றும் விசாரணையை தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதைகுழிகளைக் காண்கிறோம். அவற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இளம் பெண்கள் மற்றும் மிகச் சிறிய குழந்தைகளும் அடங்குவர்’ என்று கூறினார். …
The post குழந்தைகள் – பொதுமக்கள் படுகொலை, பெண்கள் பலாத்காரம் ரஷ்யப் படைகள் மீது 6,036 போர்க்குற்றங்கள் பதிவு : உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு பகீர் அறிக்கை appeared first on Dinakaran.