×

கோவையில் கடத்தல் மண் எடுத்து தரப்படும் விளம்பர பலகை-சமூக வலைதளங்களில் வைரல்

கோவை :  கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மணல் சப்ளையர்ஸ் கடையின் விளம்பர பலகையில் கடத்தல் மண் எடுத்து தரப்படும் என குறிப்பிட்டு இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.  கோவை கவுண்டம்பாளையம் ரோடு இடையர்பாளையம் பகுதியில் தனியார் மணல் சப்ளையர்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இதில், கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி, சிமெண்ட், போல்டர் கிராவல் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடையின் முன்பு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகையில் கடத்தல் மண் எடுத்து தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னதான் கடத்தல் மண்ணாக இருந்தாலும் இப்படியா? விளம்பர செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கடத்தல் மண் என்பது பழைய கட்டிடங்களை இடித்த பிறகு கிடைக்கும் மண் எனவும், இதனை இங்குள்ள பேச்சு மொழியில் கடத்தல் மண் என கூறுவார்கள் எனவும் வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஒரு கட்டிடத்தை இடித்த பிறகு அந்த மண்ணை, அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதை கடத்தல் மண் என இந்த பகுதியில் பேச்சு வாக்கில் கூறுவோம். இந்த மண் வீடுகளின் முன்பு கொட்ட பயன்படுத்தப்படும். மேலும், கிணறு மூடவும், கால்நடைகள் நிற்கும் இடங்களிலும், வீட்டின் பின்புறம் பகுதிகளில் கொட்டி பயன்படுத்தப்படும். இது ஒரு யூனிட் ரூ.500 ஆகும். இது குறித்து சரியான விவரம் தெரியாமல் யாரோ சமூக வலைதளங்களில் எங்களின் கடையின் விளம்பர பலகையை புகைப்படம் எடுத்து போட்டுள்ளனர். கடத்தல் மண் என்பது கடத்தி கொண்டு வந்து பயன்படுத்தப்படும் மண் இல்லை. பழைய வீடுகள், கட்டிடங்களை இடித்த பிறகு வீணாக கிடைக்கும் மண்தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

The post கோவையில் கடத்தல் மண் எடுத்து தரப்படும் விளம்பர பலகை-சமூக வலைதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Cov ,
× RELATED கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற...