×

10 நாட்கள் பெய்த கோடைமழையால் பெருஞ்சாணி நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வருகின்ற கோடை மழையால் பெருஞ்சாணி நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. அணைகள் மூடப்பட்டுள்ளதால் கோடை மழையால் பெய்த தண்ணீர் சேகரிக்கப்பட்டு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெருஞ்சாணி நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றும் மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இடியுடன் கூடிய மழையால் நாகர்கோவில் பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. பல இடங்களிலும் கழிவுநீர் சாலைகளில் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் மண், கழிவு பொருட்கள் இழுத்துவரப்பட்டன. மாவட்டத்தில் இன்று காலை வரை மழை பெய்த நிலையில் அதிகபட்சமாக நாகர்கோவில் பகுதியில் 40 மிமீ மழை பெய்திருந்தது. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 1ம் தேதி 36.25 அடியாக காணப்பட்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.02 அடியாக உயர்ந்துள்ளது. இதனை போன்று 17.60 அடியாக காணப்பட்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 23.80 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 7.77 அடியில் இருந்து 8.46 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 7.87 அடியில் இருந்து 8.46 அடியாக உயர்ந்துள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 20.30 அடியில் இருந்து 19.50 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 15.40 அடியில் இருந்து 12.10 அடியாகவும் சரிந்துள்ளது. வறண்டு காணப்பட்ட மாம்பழத்துறையாறு அணையில் 0.66 அடி தண்ணீர் உள்ளது. வரும் நாட்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது….

The post 10 நாட்கள் பெய்த கோடைமழையால் பெருஞ்சாணி நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Perunjani ,Nagercoil ,Kumari district ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...