×

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வகை செய்யும் திராவிட மாடலை இந்தியா முழுவதும் விதைப்போம்: மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வகை செய்யும் திராவிட மாடல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையை செய்வோம் என  மறைமலைநகரில் திமுக சார்பில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்க பொதுகூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு திடலில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இப்பொதுக்கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில், அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக, மதிமுக மற்றும் பாஜ உள்பட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேரும் 70 ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இந்த கூட்டத்தில், திமுக பொருளாளர் டிஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்பி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைதிலிங்கம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் வெற்றி செய்திகள் மட்டுமே நம்முடைய காதில் விழும் அளவுக்கு பணியாற்றிய லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் அனைவருக்கும் – என்னுடைய இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றும் இன்றும் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இத்தகைய மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நான், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பூங்காவான சிறுசேரி சிப்காட் தொழில்பேட்டை உள்ள மாவட்டம். தமிழகத்தின் டெட்ராய்டு என்று சொல்லத்தக்க வகையில் கார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டம் இது. தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்டு இருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம். இத்தகைய தியாக வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள். 1967 முதல் இன்று வரையிலான இந்த 55 ஆண்டு காலத்தில் ஆறுமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். பல தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்காக இருக்கிறோம். அதனால் தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அதன் அடையாளம் தான் திமுக இன்று ஆளும்கட்சியாக அமர வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் வாயிலாக திமுக நிர்வாகிகள், முன்னணியினருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது – நீங்கள் அனைவரும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருங்கள் என்பதுதான். நீங்கள் அனைவரும் மக்களோடு மக்களாக இருங்கள் என்பதுதான்.இந்தப் பிணைப்பு தான் கழகத்தை வாழ வைக்கும், வளர வைக்கும், தமிழ்நாட்டைச் செழிக்க வைக்கும், தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கும். தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துக் கொண்டு இருக்கிறோம்.  பத்தாண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்து மாதத்தில் தலைநிமிர வைத்துள்ளோம் என்பதை இந்த மறைமலை நகரில் நின்று தலைநிமிர்ந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் ஆட்சிக்கு வரும்போது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம். அனைத்து வாழ்வாதாரமும் இழந்து மக்கள் நின்ற சூழலில் – மிகுந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தோம். தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றினோம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, கொரோனா கால நிவாரணமாக 4000 ரூபாய், ஆவின் பால்விலை லிட்டருக்கு 3 குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு,  கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்கள் 14 லட்சம் பேருக்கு ரத்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து என பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்தி இருக்கிறோம். இந்த பத்து மாத காலத்தில் 64 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலமாக 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும். 1,628.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 432.82 ஏக்கர் பரப்பளவு திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பத்து மாத காலத்தில் செய்து தரப்பட்டவை ஆகும். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். அந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றிக் காட்டினால் தமிழகம் தலைநிமிரும் என்பது மட்டுமல்ல – தலைசிறந்த மாநிலமாக -இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நம்முடைய நிதிநிலை அறிக்கையை மனப்பூர்வமாகப் பாராட்டி பேசினார்.தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது. நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிறமாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் – நம்முடைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் நாம் செய்வோம். அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம். பள்ளிக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் முன்னேற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களும் வளர்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.  எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பது – கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். வெற்றி நம் கண்ணை மறைத்ததும் இல்லை; தோல்வி நம்மை சோர்வடையச் செய்ததும் இல்லை. நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்காகவே இருக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடாது என நினைப்பவர்கள்தான் இன்று நம்மை எதிர்க்கிறார்கள். ஆதிக்க வெறியில் கட்டிய பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம். காலங்காலமாக உங்களின் பொய்களை உடைத்தெறிந்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும்  பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது. நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிறமாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தத் தொடங்கி  இருக்கிறது. தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் – நம்முடைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் செய்வோம். அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம். பள்ளிக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்….

The post எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வகை செய்யும் திராவிட மாடலை இந்தியா முழுவதும் விதைப்போம்: மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K.Stal ,Karamalai Nagar ,CHENNAI ,Karamalainagar ,Dinakaran ,
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...