×

மூங்கில் விலை உயர்வு: கூடை பின்னும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஒட்டன்சத்திரம்: மூங்கில் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விருப்பாட்சி பகுதியை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், விருப்பாச்சி பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கூடை பின்னும் தொழிலிலை 350 குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இவர்கள் மூங்கிலால் செய்யப்படும் தட்டு கூடை, கோழி கூடை, முரம், அரிசி கூடை, பூ கூடை, மூங்கில் தட்டி, கதவு மற்றும் பூஜை கூடை உள்ளிட்டவை செய்து வருகின்றனர். இவர்கள் பின்னும் மூங்கில் பொருட்களை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். தற்போது டீசல் விலை உயர்வால் மூங்கில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மூங்கில் கூடை பின்னும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர். இது குறித்து மூங்கில் பொருட்கள் தயாரிக்கும்,  விருப்பாச்சியை சேர்ந்த தண்டபாணி கூறுகையில், ‘‘ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அன்றாட செலவிற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தோம், பொள்ளாச்சி, தஞ்சாவூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில்களை மொத்தமாக வாங்கி இந்த பொருட்களை செய்து வந்தோம். தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மூங்கில்கள் விலை உயர்ந்துள்ளன. கடந்த காலங்களில் ஒரு மூங்கில் மரம் ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனையானது. தற்போது டீசல் விலை உயர்வால், லாரி வாடகை உயர்ந்துள்ளதால், ஒரு மூங்கில் மரம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. இதனால் நாங்கள் தயார் செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் மிகுந்த நஷ்டத்திற்குள்ளாகி வருகிறோம். இதனால் இத்தொழிலை விட்டுவிட்டு பாதிக்கும் மேற்பட்டோர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். எனவே மூங்கில் மரங்கள் வாங்குவதற்கு மானியம் அளித்து தொடர்ந்து இத்தொழில் நாங்கள் ஈடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். …

The post மூங்கில் விலை உயர்வு: கூடை பின்னும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Otansatram ,
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில்...