×

பெரும்பான்மை பலத்தை இழந்து இருப்பதால் கோத்தபய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?.. இலங்கையின் எதிர்கட்சி தலைவர் அறிவிப்பு

கொழும்பு: பெரும்பான்மை பலத்தை இழந்து இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி மற்றும் ெபாதுமக்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனால் நாடு முழுவதும் கடந்த வாரம் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது. இதற்கிடையே, 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ளது. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு போதிய ஆதரவு உள்ளதாக அதிபர் தரப்பு கூறி வருகிறது. மேலும் கோத்தபய ராஜபக்சே தான் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறுகையில், ‘பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பொதுமக்களின் குரல்களுக்கு கோத்தபய செவிமடுக்கவேண்டும். பொதுமக்களின் வலியுறுத்தலை ஏற்று அவர் பதவியில் இருந்து விலகவேண்டும். அதிபருக்கான முழு அதிகாரத்தை ரத்து செய்து, அதிபர், நாடாளுமன்றம், நீதித் துறைகளுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம். பெரும்பான்மை பலத்தை (மொத்த உறுப்பினர்கள் 225 பேரில் 113 பேரின் ஆதரவு தேவை) நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்; இதுவே மக்களுக்காக நீங்கள் செய்யும் நன்றிக்கடன். எனவே ராஜபக்சே குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, முன்னோக்கிய பயணம் குறித்து சிந்திக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து அரசின் தலைமை கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில், ‘இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சேவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம். பொதுமக்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிட வேண்டும். அவசரநிலை அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதிபர் மாளிகை அருகே வந்து அவரைக் கொல்ல முயற்சி நடந்த பிறகுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்றார். இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான யோசனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆளுங்கட்சி எம்பிக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர். இதனால் கோத்தபய அரசுக்கு ெநருக்கடி முற்றுகிறது….

The post பெரும்பான்மை பலத்தை இழந்து இருப்பதால் கோத்தபய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?.. இலங்கையின் எதிர்கட்சி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gothabaya Govt ,Sri Lanka ,Colombo ,Lankan ,President ,Kothabaya Rajapakse ,Government ,Gothabaya Rajapakse ,Gothabaya Government ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து