×

ஆந்திராவில் கடுமையான மின்வெட்டு; மருத்துவமனைகளில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை: தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் 2 நாள் லீவு

திருமலை: ஆந்திராவில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்ைச அளிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.ஆந்திராவில் கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதால் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு செய்து வருகின்றனர். மின்வெட்டு காரணமாக அரசு மருத்துவமனைகளில் செல்போன் லைட், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.ஆர். அரசு மருத்துவமனை உள்பட மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் இதே நிலை உள்ளது.கிராமப்புறங்களில் 6 முதல் 8 மணி நேரமும், நகர்ப்புறங்களில் 4 மணி முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மேலும் மின் வெட்டு நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவில் தினசரி மின்பற்றாக்குறை தற்போது 4.5 லட்சம் யூனிட்களாக உள்ளது. இதனால் நேற்று முதல் 15 நாட்களுக்கு தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மின்வெட்டை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. வாரத்தில் 2 நாட்கள் தொழிற்சாலைகள் மின்வெட்டு காரணமாக கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும் என மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே தெலுங்கு தேச கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் நாரா லோகேஷ் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கு உடன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மெழுகுவர்த்தி, கைவிசிறி வழங்கி வருகிறார்.அப்போது அவர் கூறியதாவது: ஆந்திர மக்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நம்பி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னமான மின்விசிறிக்கு வாக்களித்தனர். ஆனால் அந்த மின்விசிறி கூட தற்போது பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தெலுங்கு தேச கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டிலேயே மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் ஜெகன்மோகன் ஆட்சி நிர்வாகத்தால் தற்போது மின்வெட்டு மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கு கூட மின்சாரம் வழங்க முடியாமல் வாரத்திற்கு 2 நாள் அதிகாரப்பூர்வ மின்வெட்டை அறிவித்து தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post ஆந்திராவில் கடுமையான மின்வெட்டு; மருத்துவமனைகளில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை: தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் 2 நாள் லீவு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thirumalai ,Andhra ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...