×

உலக தோல் சுகாதார தினம் ‘ஸ்டீராய்டு’ கலந்த கிரீமை முக அழகிற்கு பூசினால் மலட்டுத்தன்மை ஏற்படும்-நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் திடுக் தகவல்

நெல்லை : ஸ்டீராய்டு கலந்த கிரீமை முக அழகிற்காக பூசினால் மலட்டுதன்மை, உடல் எடை கூடுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். தோல் பூஞ்சை தொற்று பரவல் 45 சதவீதமாக உயர்ந்துள்ளது என நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தோல் ஆரோக்கிய தினம் மற்றும் உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தோல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு கைப்பிரதிகள் மற்றும் பதாகைகளை டீன் டாக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டார். பின்னர் டீன் ரவிச்சந்திரன்,  தோல் நோய் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் நிர்மலா தேவி ஆகியோர் கூறுகையில் ‘‘உலக தோல் நல தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘தோல் இயல் படித்த மருத்துவர்களே உண்மையான சரும மற்றும் முடி பாதுகாப்பு நிபுணர்கள்’ என்ற கருத்தை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 3ல் ஒரு பகுதியினர் தோல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். 4வது முக்கிய வியாதியாக இது உள்ளது. இந்திய மக்கள் தொகையில் பல்வேறு நிலப்பரப்புகளில் 7.9 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பரவல் உள்ளது.தோல் பூஞ்சை தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2016ல் 26.2 சதவீதமாக இருந்தது. தற்போது இது 45.3 சதமாக உயர்ந்துள்ளது. தோல் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தாமாக மருந்து எடுத்துக் கொள்கின்றனர். வணிக நோக்கத்தோடு தற்போது வரும் சில தோல் நல பொருட்கள் பாதகத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக முகத்தை அழகுபடுத்த தற்போது ஸ்டீராய்டு சேர்க்கப்பட்ட கிரீம்கள் வருகின்றன. இவற்றை பயன்படுத்துபவதால் நாளடைவில் தோல் சுருக்கம், முகப்பரு, எரிச்சல், தோல் சிவந்துபோதல், நிறமாற்றம், முகரோம வளர்ச்சி, உடல் எடை கூடுதல், மலட்டுத் தன்மை ஏற்படுதல் மட்டுமல்லாது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். படர் தாமரை என்ற பூஞ்சான் தொற்றுகளும் பரவும்.  படர் தாமரை பாதிப்புகள் 70 சதவீதம் ஸ்டீராய்டு கலந்த கிரீம் பயன்படுத்துவதால் வருகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.தேவையான நீர் அருந்துதல், ஆரோக்கிய உணவு, குடியை நிறுத்துதல், நல்ல தூக்கம், சரியான உடற்பயிற்சி போன்றவை மேற்கொண்டால் சரும மற்றும் முடியை பராமரிக்கலாம். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தோல் நோய் சிகிச்சைக்கு நவீன கருவி வசதிகள் உள்ளன’’ என்றனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துறைத்தலைவர்கள் ராமசுப்பிரமணியன், முகமது ரபிக், சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post உலக தோல் சுகாதார தினம் ‘ஸ்டீராய்டு’ கலந்த கிரீமை முக அழகிற்கு பூசினால் மலட்டுத்தன்மை ஏற்படும்-நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : World Skin Health Day ,Dean ,Nellie Medical College ,Nellie ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து...