×

புதுக்கோட்டை அருகே ரூ.2 கோடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு கோயில்

புதுக்கோட்டை: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி குவாலியரில் பிறந்தார். இவர் 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவர், மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டுகள் எம்பி பதவி வகித்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு, இந்தியா அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது. வாஜ்பாய் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கர சாலை திட்டம் நாட்டின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வாஜ்பாயின் சேவைகளை பாராட்டி, அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி மறைந்தார். இந்நிலையில் பாஜகவின் 42வது ஸ்தாபன தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் வீரம்பட்டி அருகே வாஜ்பாய்க்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமாபாரதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து கோயில் கட்டும் குழுவினர் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 2,400 சதுர அடியில் 3 அடுக்கு கோயில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இங்கு பாரதமாதாவுக்கு 5 அடி உயர முழு சிலையும், வாஜ்பாய்க்கு மூன்றரை அடி உயரமுள்ள மார்பளவு சிலையும் வடிவமைக்கப்படுகிறது. இந்த கோவில் வாஜ்பாய் அறிவுத்திருக்கோயில் என்று அழைக்கப்படும் என்றனர்….

The post புதுக்கோட்டை அருகே ரூ.2 கோடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு கோயில் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Prime Minister Vajpayee ,Former ,Atal Bihari Vajpayee ,Gwalior ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...