×

சித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்ட மதுரை வீதிகள் தங்கச்சப்பரத்தில் அம்மன், சுவாமி அருளாசி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி, தினமும் காலை மாலையில் சுவாமி, அம்மன் வீதியுலா நடந்து வரும் நிலையில், வீதி எங்கும் பக்தர்கள் திரண்டு நின்று உற்சாகத்துடன் பக்திப்பெருக்கில் தரிசித்தனர். மாநகரமே விழாக்கோலம் கண்டு வருகிறது.மதுரையில் சைவ, வைணவ ஒற்றுமை பேசும் ஒரு மகத்தான விழாவாக சித்திரைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் மீனாட்சி கோயிலில் துவங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் நேரடியாக பங்கேற்கும் விழாவாக நடத்தப்படுவது அனைத்து தரப்பினரையும் பெருமகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கொடியேறற நாள் இரவில் சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வந்தனர்.தொடர்ந்து திருவிழாவின் 2ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு தங்கச்சப்பரத்தில் மீனாட்சி கோயிலுக்குள் உள்ள முத்துராமய்யர் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். தொடர்ந்து மாசி வீதிகளில் வலம் வந்து, காலை 9.30 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலை அம்மன், சுவாமி வந்தடைந்தனர். நேற்றிரவு 7 மணியளவில் பூதம், அன்ன வாகனங்களில் நான்கு மாசிவீதிகளிலும் சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். தினமும் நடந்து வரும் சுவாமி, அம்மன் வீதியுலாவில் ஒரு இடத்தை கடந்து செல்லவே சுமார் அரை மணிநேரத்திற்கும் அதிகமாகிறது.மேலும், சுவாமி, அம்மனுக்கு முன்னால் ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சுவாமி வேடம் தரித்து சிறு குழந்தைகள், சங்கொலியுடன் மேளதாளங்கள் என இம்முறை சித்திரைத் திருவிழாவின் இந்த வீதியுலாக்களில் பக்தர்கள் கொண்டாட்ட குதூகலத்துடன் பங்கேற்று வருகின்றனர். கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகள் காணாத காட்சியாக, பொதுமக்களும் சாலையின் இருபுறங்களிலும் நின்றபடி, சுவாமி, அம்மனை வணங்கி தரிசித்ததுடன், செல்போனில் வீடியோ எடுத்தும் உற்சாகமாக இருந்ததை காண முடிந்தது.இன்று (ஏப். 7) கைலாசபர்வதம், காமதேனு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வருகின்றனர். நாளை தங்க பல்லக்கிலும், 9ம் தேதி தங்க குதிரையிலும், 10ம் தேதி ரிஷப வாகனத்திலும், 11ம் தேதி நாகேசுவரர், யாளி வாகனங்களிலும் என தொடர்ந்து சுவாமி, அம்மன் மதுரை வீதிகளில் உலா வருகின்றனர். ஏப். 12ம் தேதி இரவு 8.20 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப். 13ல் திக்கு விஜயம், ஏப். 14 காலை 10.35 மணிக்கு மேல் திருக்கல்யாணம் என அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.ஏப். 15ம் தேதி மாசி வீதிகளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் நடத்தப்படும் தேரோட்டத்திற்கென தேர் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஏப். 16ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதேபோல், அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் தொடர் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஏப். 16ல் நடக்கிறது. இதற்கென அழகர்கோயிலில் வரும் 12ம் தேதி திருவிழா தொடங்குகிறது. சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு புறப்பட்டு திரும்பும்போது தங்கிச் செல்லும் 400க்கும் அதிக மண்டகப்படிகளை தயார்ப்படுத்தும் பணிகளும் வேகமடைந்துள்ளன….

The post சித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்ட மதுரை வீதிகள் தங்கச்சப்பரத்தில் அம்மன், சுவாமி அருளாசி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chitrai festival ,Goddess ,Swami Arulasi ,Thangachapparam ,Madurai Meenakshiyamman Temple painting festival ,Swami ,Amman Veethiula ,
× RELATED கம்பத்தில் சித்திரை திருவிழா மஞ்சள் நீராட்டம்