×

கம்மின்ஸ் அதிரடியை என்னால் நம்ப முடியவில்லை: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

புனே: ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 (36பந்து), திலக் வர்மா 38 (27பந்து), பொல்லார்ட் 22 (5பந்து) ரன் அடித்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணியில் ரகானே 7, ஸ்ரேயாஸ் அய்யர் 10, சாம் பில்லிங்ஸ் 17, நிதிஷ் ராணா 8, ரஸ்சல் 11 ரன்னில் வெளியேறினர். 101 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் களம் இறங்கிய பாட் கம்மின்ஸ் அதிரடியில் மிரட்டினார். பும்ரா வீசிய 15வது ஓவரில் ஒருசிக்சர், பவுண்டரி அடித்த கம்மின்ஸ், டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில், 4 சிக்சர், 2 பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்துவைத்தார். 16 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்த கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கம்மின்ஸ் 56 (15 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 50 (41பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் கொல்கத்தா பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மும்பை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் புனேவில் இதுவரை ஆடிய 7 போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது: கம்மின்ஸ் விளையாடிய விதத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்பது தான் உண்மை. நான் பந்துகள் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். வலைபயிற்சியில் கூட கம்மின்ஸ் விரைவாக விக்கெட்டை தான் இழந்தார். அவரிடம் இருந்து இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டைம் அவுட்டின்போது வெங்கடேஷிடம் பொறுமையாக விளையாட அறிவுறுத்தினோம்.அதேபோல் கம்மின்ஸை முடிந்தவரை அதிரடியாக விளையாட சொன்னோம், ஆனால் அவர் ஒரே ஓவரில் போட்டியை முடித்துவிட்டார். இரண்டு இன்னிங்ஸின் பவர்பிளேயிலும் பிட்ச் ஒரே மாதிரியாக இருந்தது. நான் பேட்டிங் செய்யச் சென்றபோது பந்து பவுன்ஸ் ஆனது. பவர்பிளேக்குப் பிறகு, அது மிகவும் எளிதாகிவிட்டது என்று நினைக்கிறேன், என்றார். 14 பந்தில் அரைசதம் அடித்த கம்மின்ஸ், ஐபிஎல்லில் குறைந்தபந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின் சாதனையை சமன் செய்தார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், நானே இந்த ஆட்டத்தால் ஆச்சரியமடைந்துள்ளேன் என்பது தான் உண்மை. மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் எந்த ஷாட்களை இலகுவாக அடிக்க முடியுமோ, அதை மட்டுமே சரியாக செய்தேன், பெரிதாக எதுவும் யோசித்து விளையாடவில்லை. இந்த தொடரில் எனது முதல் போட்டியிலே சிறப்பாக விளையாடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்….

The post கம்மின்ஸ் அதிரடியை என்னால் நம்ப முடியவில்லை: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Cummins ,Captain Shreyas Iyer ,Pune ,Mumbai Indians ,Kolkata Knight Riders ,14th league match ,IPL ,Pune.… ,Cummins' ,Dinakaran ,
× RELATED சென்னை-புனே சென்ற ரயிலில் 40...