×

இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம் பெரும்பான்மை இழந்தது ராஜபக்சே அரசு: கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்கிறது

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியிருப்பதால், பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற நிதி அமைச்சர் அலி சப்ரி, 24 மணி நேரத்திற்குள் பதவி விலகியதும், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, மக்களின் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், காஸ் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் அனைத்திற்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் அரசுக்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால், அவர்களின் தவறான பொருளாதார கொள்கைகளே, நாட்டின் சீரழிவுக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஒட்டுமொத்த அமைச்சரவையையும் கூண்டோடு கலைத்தார். 26 அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜபக்சேவின் சகோதரரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் பதவிலிருந்து நீக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, தற்காலிகமாக அரசு நிர்வாகத்தை கவனிக்க புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி உட்பட 4 முக்கிய துறைகளுக்கு மட்டும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அதிபர் கோத்தபயவுக்கு முன்பாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். நிலைமையை சமாளிக்க, அனைத்து கட்சிகள் அடங்கிய கூட்டணி, அமைச்சரவையில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து விட்டன.இந்நிலையில், பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அவர், அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தந்த ராஜினாமா கடிதத்தில், ‘தற்காலிக நடவடிக்கையாகத்தான் நிதி அமைச்சர் பொறுப்பேற்றேன். நீண்ட யோசனைக்குப் பிறகு, தற்போதைய சூழலையும் கருத்தில் கொண்டு இப்பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த சூழலில் தேவையான இடைக்கால நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறேன்,’ என கூறி உள்ளார். இது ஒருபுறமிருக்க, ஆளும் இலங்கை பொதுஜன சுதந்திர கூட்டமைப்பு கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இக்கூட்டணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைவராக உள்ள இலங்கை பொதுஜன பெரமுான கட்சி உள்ளிட்ட 14 கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 225 எம்பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 150 எம்பி.க்களுடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவி வகிக்கிறார். தற்போது ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதால், கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக நேற்று நாடாளுமன்ற அவசர கூட்டம் கூடியது. இதில் பங்கேற்க வந்த முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சியின் 14 எம்பி.க்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதே போல், ஏற்கனவே கூட்டணி கட்சியின் சில அதிருப்தி எம்பி.க்கள் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்படுவதாகவும், அவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 41 எம்பி.க்கள் வரை அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 113 என்ற எண்ணிக்கையை விட குறைவாக 109 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே ஆளுங்கட்சிக்கு தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தங்களுக்கு 138 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுங்கட்சி எம்பிக்கள் கூறி உள்ளனர். எனவே, பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதால் விரைவில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே, இலங்கையில் மக்களின் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. * பதவி விலக மாட்டேன் கோத்தபய திட்டவட்டம்கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். அதே சமயம், நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, இடைக்கால அரசை நியமிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.* 3 நாடுகளில் தூதரகம் மூடல்கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசு நார்வே, ஈராக், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் தனது தூதரகத்தை தற்காலிகமாக நேற்று மூடியது.* இந்தியா உதவி தொடரும்இலங்கைக்காக இந்திய தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘இதுவரை இலங்கைக்கு இந்தியா ரூ.11,500 கோடி கடன் உதவி செய்துள்ளது. இலங்கைக்கான உதவியை இந்தியா தொடர்ந்து செய்யும்’ என உறுதி அளித்துள்ளார்.* இலங்கை ரூபாய் மதிப்பு கடும் சரிவுஅமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கையின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவின் ஒரு டாலர் இலங்கை ரூபாய் மதிப்பில் 310 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அந்நிய செலாவணி இல்லாமல் தவிக்கும் இலங்கைக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.* மருத்துவ எமர்ஜென்சிஇலங்கையில் எரிவாயுவை தொடர்ந்து மருந்து பொருட்களும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியவாசிய மருந்துகள் மட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான நாப்கின்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது….

The post இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம் பெரும்பான்மை இழந்தது ராஜபக்சே அரசு: கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்கிறது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rajapakse ,Colombo ,Mahinda Rajapakse ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...