×

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா அடிப்படை உரிமைக்கு எதிரானது: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களின் அடிப்படை உரிமை, தனிநபர் அந்தரங்க உரிமைக்கு எதிரானது’ என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 1920ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கைதிகள் அடையாள சட்டத்தின்படி, கைது செய்யப்படுபவர்களின் கைவிரல் ரேகைகள், கால் விரல் ரேகைகளை மட்டுமே காவல்துறையினர் பதிவு செய்து சேகரிக்க முடியும். அதுவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் சேகரித்துவிட முடியாது. இதற்கு மாற்றாக குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் சமீபத்தில் தாக்கல் செய்தது. இதன்படி, காவல்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. போன்ற விசாரணை நிறுவனங்கள் கைது செய்யப்படுபவர்கள், குற்றவாளிகளின் கைவிரல், கால் விரல் ரேகைகள் மட்டுமின்றி எச்சில், வியர்வை, தலைமுடி, விரல் நக துண்டுகள், டி.என்.ஏ. மாதிரிகள் என அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க முடியும்.இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாகுபாடின்றி நாடு முழுவதும் காவல் நிலைய மரணங்கள் நடக்கின்றன. காவல் நிலைய மரணங்களை தடுக்க அரசு ஏதாவது செய்துள்ளதா? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு முன்பு குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும், பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராகவும் இருந்தவர்கள் தான். மாநில அமைச்சராக இருந்த போது, காங்கிரஸ் அரசு மாநில உரிமைகளை பறிப்பதை எதிர்த்தவர்தான். ஆனால், மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்ததும், மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் தாங்களே எடுத்து கொள்ள விரும்புகிறார்கள்.வாழ்நாள் முழுவதும் நீங்கள் மன்னராகவே இருந்து விட முடியாது என்று பழமொழி உண்டு. அரசியல் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று காங்கிரசுக்கு நடந்தது, நாளை பாஜ.வுக்கும் நடக்கக் கூடும். எப்போதும் ஆட்சியில் இருப்போம் என்று நினைத்து மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் எடுத்து கொள்ள கூடாது.இந்த மசோதா எத்தகைய கைதிகளின் தகவல்களை சேகரிக்கலாம் என்ற வரைமுறையில்லை. கையெழுத்து, பெருவிரல் ரேகை, மரபணு கூறு, தலைமுடி, கண்ணின் கருவிழி, கைரேகை, பாதரேகை ஆகியவற்றை சேகரிப்பது ஏன்? இந்த தகவல்களை காவல்துறையே தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. கைதிகளின் அடையாளம் சேகரிப்பு மசோதா தனிப்பட்ட நபர்களை குறிவைத்து பயன்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதியாக கூற முடியாது. ஒன்றிய அரசு சிறுபான்மையினரைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் சிறுபான்மையினருக்கு எதிராக அதனை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. பல ஆயிரம் கோடி மோசடி செய்த லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா விவகாரத்தில் என்ன நடந்தது? அவர்களை நாடு கடத்த எந்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது? சிறை மாநில அரசின் கீழ் வரும் விவகாரம். இதில் ஒன்றிய அரசு தலையிட என்ன இருக்கிறது? எனவே, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல்  நடைமுறை திருத்த மசோதா மக்களின் அடிப்படை உரிமை, தனிநபர் அந்தரங்க  உரிமைக்கு எதிரானது மற்றும் மக்கள் விரோதமானது. இவ்வாறு அவர் பேசினார். இறுதியில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவே சட்டம்: திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்விக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை வலுப்படுத்தவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தம் செய்யாவிடில், நீதிமன்றம் கேட்கும் சாட்சியங்களை அளித்து, குற்றங்களை நிருபிக்க முடியாமல் போய் விடும். வரைவு மசோதாவில் தனிநபர் தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,’’ என தெரிவித்தார்….

The post குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா அடிப்படை உரிமைக்கு எதிரானது: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maratan ,MB ,New Delhi ,Government of the Union ,Diyanidhi Maratan ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...