×

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: பட்லர் அபார சதம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வென்றது.டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்து ரோகித் வேகத்தில் டிம் டேவிட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த படிக்கல் 7 ரன் எடுத்து தைமல் மில்ஸ் பந்துவீச்சில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.ராஜஸ்தான் 6 ஓவரில் 48 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில், பட்லர் – கேப்டன் சாம்சன் இணைந்து மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்து மிரட்டியது. சாம்சன் 30 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி போலார்டு பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து பட்லருடன் இணைந்த ஹெட்மயர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, ராயல்ஸ் ஸ்கோர் எக்கச்சக்கமாக எகிறியது. ஹெட்மயர் 35 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), பட்லர் 100 ரன் (68 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆர்.அஷ்வின் 1, நவ்தீப் சைனி 2, பராக் 5 ரன்னில் அணிவகுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. டிரென்ட் போல்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.மும்பை பந்துவீச்சில் பும்ரா, மில்ஸ் தலா 3, போலார்டு 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இஷான், கேப்டன் ரோகித் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 10, அன்மோல்பிரீத் 5 ரன்னில் வெளியேற, இஷான் – திலக் வர்மா ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 81 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.இஷான் 54 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் சைனி வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் பவுலர்களுக்கு கிலியூட்டிய திலக் வர்மா 61 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் கிளீன் போல்டாக, மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. போலார்டு ஒரு முனையில் போராட, டிம் டேவிட் 1, டேனியல் சாம்ஸ் 0, முருகன் அஷ்வின் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கடைசி பந்தில் போலார்டு (22 ரன், 24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பும்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.ராஜஸ்தான் பந்துவீச்சில் சைனி, சஹால் தலா 2, போல்ட், பிரசித், ஆர்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜஸ்தான் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது….

The post மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: பட்லர் அபார சதம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Mumbai ,Butler ,IPL league ,Mumbai Indians ,Rajasthan Royals ,TY Patil Arena ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...