×
Saravana Stores

உகாதி பண்டிகைக்காக ஜவ்வாதுமலை கோயிலுக்கு சென்றபோது சோகம் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து தாய், மகள்கள் உட்பட 11 பெண்கள் பலி: படுகாயமடைந்த 24 பேருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலையில் உகாதி பண்டிகையையொட்டி கோயிலுக்கு சென்றபோது 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து தாய், மகள்கள் உட்பட 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உகாதி பண்டிகையான தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி நேற்று நெல்லிவாசல் நாடு அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர், சேம்பரை என்ற பகுதியில் குன்றின் மீதுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சரக்கு ஏற்றும் மினி பிக்கப் வேனில் சென்றனர். வேனை உரிமையாளரான பரந்தாமன் (40) ஓட்டிச் சென்றுள்ளார்.மலைப்பாதையில் பாதி அளவு கடந்தபோது, செங்குத்தான பகுதியில் பாரம் தாங்காமல் வேன் ஏற முடியாமல் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் அரை கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நகர்ந்து சென்று, 50 அடி ஆழ பள்ளத்தில் பலமுறை உருண்டு விழுந்து கவிழ்ந்தது. இதை எதிர்பார்க்காமல் வேனில் இருந்தவர்கள் பயங்கரமாக அலறினர்.இந்த விபத்தில் புலியூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மனைவி துர்கா(40), அவரது மகள்கள் பவித்ரா(18), பரிமளா(12), மற்றும் சுதந்தரா(55), செல்வி(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர். மேலும் டிரைவர் பரந்தாமன் உட்பட பலர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். தகவலறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் டிரைவர் உட்பட 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மங்கை(60), சிக்கியம்மாள்(55), பரிமளா(37), அலமேலு(12), சென்னம்மாள்(12), ஜெயப்பிரியா(16) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 24 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.இதற்கிடையில் டிஐஜி ஆனிவிஜயா, திருப்பத்தூர் எஸ்பி (பொறுப்பு) ராஜேஷ்கண்ணன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கலெக்டர் அமர்குஷ்வாஹா, எல்எல்ஏக்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.உகாதி பண்டிகையையொட்டி கோயிலுக்கு சென்றபோது மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 11 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலியானோர் குடும்பத்துக்கு தலா ₹2 லட்சம்: முதல்வர் அறிவிப்புமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 11 பேர் பலியான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.செல்போன் சிக்னல் கிடைக்கவில்லைபடுகாயமடைந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘‘கோயிலுக்கு சென்றபோது திடீரென வேன் பின்னோக்கி நகர்ந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர். இதில் என் கண் முன்னே 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து செல்போனில் யாருக்காவது தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயன்றபோது, அப்பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அனைவரும் அலறி துடித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக அவ்வழியாக சென்றவர்கள் எங்களது அலறல் சத்தத்தை கேட்டு மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்’’ என்றார்.டோலி கட்டி தூக்கி வந்தனர்மலையில் இருந்து வேன் கவிழ்ந்த பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்க போராடினர். விபத்து நடந்த பகுதி போர்க்களம்போல காட்சியளித்தது. படுகாயமடைந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை டோலி கட்டி தூக்கி வந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். …

The post உகாதி பண்டிகைக்காக ஜவ்வாதுமலை கோயிலுக்கு சென்றபோது சோகம் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து தாய், மகள்கள் உட்பட 11 பெண்கள் பலி: படுகாயமடைந்த 24 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Javvadumalai ,Ugadi festival ,Tirupathur ,Tirupattur ,
× RELATED போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம்...