×

நடப்பாண்டில் மாணவர் தங்கும் விடுதி, பள்ளி கட்டிடம் கட்ட ரூ.200 கோடி நிதி-தாட்கோ தலைவர் தகவல்

நாகை : நாகை மாவட்டம் பாலையூர் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது உள்ள கட்டடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பனிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அழிஞ்சமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்நிலை கல்வி பயில நாகை, சிக்கல், நாகூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவை அனைத்தும் பள்ளி அமைந்துள்ள தூரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இங்கிருந்து செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்கள் கட்ட போதுமான இட வசதிகள் உள்ளது. தாட்கோ மூலம் புதிதாக 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. மேலும் 200 மீட்டர் தூரத்திற்கு ரூ.19 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் இன்னும் ஒருவார காலத்திற்கு தொடங்கப்பட உள்ளது. மீதம் உள்ள 250 மீட்டர் அளவிற்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.34 லட்சம் மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போதுமான கழிவறைகள் கட்டப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் மற்ற துறைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டதோ அதேபோல் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டும் இன்றி மக்களுக்கான திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கொண்ட ஒரு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். அதேபோல் தாட்கோ தலைவராக என்னை நியமித்துள்ளார். முதல்வர் உத்தரவின் படி பள்ளி ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்களுக்கு தேவையான கட்டட வசதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகள் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். இந்தாண்டு தாட்கோ மூலம் ஆதிதிராவிட பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகள், பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயசித்ரகலா, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், நாகை ஊராட்சி ஒன்றிய தலைவர் அனுசியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்….

The post நடப்பாண்டில் மாணவர் தங்கும் விடுதி, பள்ளி கட்டிடம் கட்ட ரூ.200 கோடி நிதி-தாட்கோ தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tatco ,Nagai ,Nagai District ,Near Palayur, Nagai District ,Atiravada Welfare High School ,Tamil Nadu ,Fund ,Dadgo ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...