×

கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த முயன்ற 9 லாரிகள் பறிமுதல்

பணகுடி:  விஜயநாராயணத்திலிருந்து விதி மீறி அதிக எடையுடன் கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்திச்செல்ல முயன்ற 9 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி, பணகுடி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கிருந்து அரசினால்  அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக கனிமவள கற்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது. இத்தகைய லாரிகள் அவ்வப்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை நாங்குநேரி அருகிலுள்ள விஜயநாராயணத்திலிருந்து கேரளாவிலுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு 4 லாரிகளில் அதிக எடையுடன் கனிம வள கற்கள் ஏற்றி  சென்று கொண்டிருந்தன. நேற்று அதிகாலை பணகுடி போலீசார் தெற்கு வள்ளியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் வேகமாக சென்ற 4 லாரிகளை  மடக்கி பிடித்து பரிசோதனை செய்தனர். அதில் அரசினால் அனுமதிக்கப்பட்ட  20 டன்  எடையை விட அதிக அளவு  கனிம வளங்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.விசாரணையில் லாரிகளில்  கனிமவளத்தினை  கடத்திச் சென்றவர்கள்  குமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழி தெற்கு தெருவை சேர்ந்த மைக்கிள் ராஜ் மகன் சஜின் என்ற செந்தில் (31), இறச்சகுளம் ராஜிவ்நகரைச் சேர்ந்த சுடலை முத்து மகன் லிங்க சிவா (29), செண்பகராமன் புதுரை சேர்ந்த சந்திரன் மகன் புதுவின் (31) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த  சமாதானம் மகன் மணிகண்டன் (31) என்பது தெரிய வந்தது. பிடிபட்ட 4 லாரிகளையும் பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாங்குநேரியில் எஸ்பி தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விஜயநாராயணத்திலிருந்து கேரளாவுக்கு விதி மீறி கனிம வளங்களை கடத்தி செல்ல முயன்ற கேரளா பதிவு எண் கொண்ட 5 லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த முயன்ற 9 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Keralla ,Nagkudi ,Kerla ,Vijayanarayana ,Dinakaran ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தை...