×

உலக கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா: கடைசி பந்தில் தோல்வி

கிறைஸ்ட்சர்ச்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், தென் ஆப்ரிக்க அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் கடைசி பந்து வரை கடுமையாகப் போராடி தோற்ற இந்திய அணி நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று பேட் செய்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனைகள் மந்தனா, ஷபாலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 91 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அதிரடியாக அரை சதம் விளாசிய ஷபாலி 53 ரன் எடுத்து (46 பந்து, 8 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த யாஸ்திகா 2 ரன்னில் வெளியேற, மந்தனாவுடன் இணைந்த கேப்டன் மிதாலி ராஜ் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. மந்தனா 71 ரன் (84 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), மிதாலி 68 ரன் (84 பந்து, 8 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ரன் சேர்க்க… பூஜா வஸ்த்ராகர் 3, ரிச்சா கோஷ் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹர்மன்பிரீத் 48 ரன் (57 பந்து, 4 பவுண்டரி) விளாசி காகா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஸ்நேஹ் ராணா 1, தீப்தி ஷர்மா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷப்மிம் இஸ்மாயில், மஸபதா கிளாஸ் தலா 2, அயபோங்கா காகா, க்ளோ டிரையன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. லிஸல் லீ 6, வுல்வார்ட் 80 ரன் (79 பந்து, 11 பவுண்டரி), லாரா குட்ஆல் 49, கேப்டன் லுவஸ் 22, மரிஸன்னே காப் 32, க்ளோ டிரையன் 17 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் ஆட்டம் பரபரப்பானது.ஒரு முனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிரீஸ் 49 ரன், த்ரிஷா செட்டி 6 ரன்னுடன் களத்தில் இருக்க, கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. தீப்தி வீசிய 2வது பந்தில் த்ரிஷா ரன் அவுட்டானார். 5வது பந்தில் டு பிரீஸ் கேட்ச் கொடுத்தாலும், துரதிர்ஷ்டவசமாக அந்த பந்து ‘நோ பால்’ ஆக அமைந்தது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து வென்றது. டு பிரீஸ் 52 ரன் (63 பந்து, 2 பவுண்டரி), ஷப்னிம் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி, ஹர்மன்பிரீத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டு பிரீஸ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்ததால் அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.* இங்கிலாந்து முன்னேற்றம்வெலிங்டனில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதிய இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது (பியூமான்ட் 33, சைவர் 40, அமி ஜோன்ஸ் 31, டங்க்லி 67, பிரன்ட் 24*, எக்ளெஸ்டோன் 17*). அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 48 ஓவரில் 134 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தது.* அரையிறுதியில்லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா (14), தென் ஆப்ரிக்கா (11), இங்கிலாந்து (8), வெஸ்ட் இண்டீஸ் (7) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. நாளை மறுநாள் வெலிங்டனில் நடக்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், மார்ச் 31ல் நடக்கும் 2வது அரையிறுதியில் (கிறைஸ்ட்சர்ச்) தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இறுதிப் போட்டி ஏப்ரல் 3ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது….

The post உலக கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா: கடைசி பந்தில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : India ,World Cup ,Christchurch ,ICC Women's World Cup ODI ,South Africa ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...