
குலசேகரம்: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் இங்கு தண்ணீர் கொட்டுவது வழக்கம், எனவே சுற்றுலா பயணிகள் கூட்டம் சாதாரண நாட்களில் மிதமாகவும், விடுமுறை நாட்களில் அதிகமாக காணப்படும். மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் நீர்நிலை சுற்றுலா தலங்களை நாடி செல்கின்றனர். அந்த வகையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் விடுமுறை தினமான கடந்த 2 நாட்களும் கூட்ட நெரிசலால் திற்பரப்பு திணறியது. குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், அருவி அருகே உள்ள நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அருவியின் மேல்புறத்தில் உள்ள தடுப்பணையில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பகல் நேரத்தில் கடுமையான வெயில் நிலவிய நிலையில் மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளை மிகுந்து உற்சாகமடைய செய்தது. அதிக கூட்டம் காரணமாக பார்க்கில் பகுதியில் இருந்து சாலையின் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நகர முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது….
The post கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.