×

துப்பாக்கி முனையில் ரயில்வே இடத்தில் கட்டிய வீடுகளை அகற்ற முயற்சி: ரயில்வே போலீசார் குவிந்ததால் பரபரப்பு; அமைச்சரின் அறிவுரையால் திட்டம் நிறுத்தம்

சென்னை: சென்னை வில்லிவாக்கம் (தெற்கு), ஜெகநாதன் நகர், 3வது பிரதான சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமாக பல ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக, 340க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், ரயில்வே போலீசார் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக, அப்பகுதியினரிடம் நோட்டீஸ் கொடுத்தனர். இதுகுறித்து, திமுக எம்எல்ஏ வெற்றியழகனிடம், பொதுமக்கள் தெரிவித்தனர். நேற்று, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியினரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க, நேற்று காலை 100க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஏ.கே. 47 துப்பாக்கியுடன் குவிந்தனர். தகவலறிந்த வில்லிவாக்கம் தொகுதி  திமுக எம்எல்ஏ வெற்றியழகன், கவுன்சிலர் ஜெயின், தாசில்தார் ராமு மற்றும் வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், ரயில்வே போலீசாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிப்போம் என, ரயில்வே போலீசார் உறுதியாக தெரிவித்தனர். எனவே, இரு தரப்புக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், எம்எல்ஏ வெற்றியழகன், அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை செல்போனில் தொடர்புகொண்டு, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, ரயில்வே துறை உயரதிகாரிகளை அமைச்சர் செல்போனில் தொடர்புகொண்டு, ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட  வீடுகளை இடித்தால், அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அப்பகுதி மக்களிடம் ரயில்வே போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில், ஏ.கே. 47 துப்பாக்கியுடன் ரயில்வே போலீசார் குவிந்ததால் பரபரப்பு நிலவியது….

The post துப்பாக்கி முனையில் ரயில்வே இடத்தில் கட்டிய வீடுகளை அகற்ற முயற்சி: ரயில்வே போலீசார் குவிந்ததால் பரபரப்பு; அமைச்சரின் அறிவுரையால் திட்டம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Villiwakkam ,Jeganathan Nagar ,3rd Main Road ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...