×

ஊட்டியில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடக்கூடாது? சுற்றுலா பகுதிகளில் மது விற்பனைக்கு மாற்று வழி உண்டா?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் மது விற்பனைக்கு மாற்று வழி உள்ளதா என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அவ்வழியே சென்ற யானைகள் கீழே சறுக்கி விழுவது போன்ற காணொளி வெளியானது. இதையடுத்து, வனவிலங்குகளை பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு சார்பில் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர் நீதிமன்ற உத்தரவு படி இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.அப்போது ஆஜரான அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன்,  யானைகள் வழித்தட பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். அப்போது  வன பகுதியில் பிளாஸ்டிக்  பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான வார  இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்த நீதிபதிகள், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  கடும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும்.வனம், மலைப்பகுதிகளில் மது பாட்டில்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, அப்பகுதியில் மாற்று வழியில் மது விற்பனைக்கு செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்தும், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாள்கள், அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்குரைஞர்கள் செல்வேந்திரன், சீனிவாசன் ஆகியோருடன் நாங்களும் நேரில் ஆய்வு செய்வோம் என உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று  தெரிவித்தனர்….

The post ஊட்டியில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடக்கூடாது? சுற்றுலா பகுதிகளில் மது விற்பனைக்கு மாற்று வழி உண்டா?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Ooder ,Chennai High Court ,Chennai ,High Court of Tamil Nadu ,Oodi ,Feeder ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்