×

கரும்புக்கான சிறப்பு ஊக்க தொகை விரைவில் வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை : கரும்பு விலை சிறப்பு ஊக்கு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூட்டத்தில் வெளிடப்பு செய்த விவசாயிகள், சுமார் அரை மணி நேரத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.சுவாமிமலை சுந்தர விமல்நாதன் பேசும்போது, கோயில் நில குத்தகைதாரர்களுக்கு குத்தகை நிலுவைக்கான அறிவிப்பு கடிதம் எதுவும் தராமல் குத்தகை உழவர்களை அவமதிக்கும்வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சிவப்பு கொடிகளை வயலில் நட்டு குத்தகைதாரர்களை சாகுபடி செய்ய விடாமல் தடுக்கப்படுகிறது. குத்தகை நிலுவைத் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு மாவட்ட கலெக்டர், மயிலாடுதுறை இணை ஆணையர், குத்தகை விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும் என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பேசும்போது, தஞ்சை, பூதலூர் தாலுகா பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் பாய்ந்து விவசாயம் நடந்து வருகிறது. இரு வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் ஆண்டுதோறும் மிகவும் காலதாமதமாக நடக்கிறது. இந்த ஆண்டு தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.திமுக மத்திய மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ் பேசும்போது, கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு விலை சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மின் வாரியத்தின் திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தை பிரித்து தஞ்சைக்கு என தலைமை பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை தற்போது கண்காணிப்பு அலுவலர் அலுவலக வளாகத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேசும்போது, காவிரியின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணைக்கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு இதற்காக எடுத்து வரும் சட்டப்பூர்வ மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கிறோம். திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் வாழ்வை காப்பாற்ற அந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.பட்டுக்கோட்டை நகர திமுக விவசாயி அமைப்பாளர் ராஜேந்திரன் பேசும்போது, பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஏரி மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ஏரியின் மதகுகள் பழுதடைந்துள்ளன. இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. எனவே ஏரியின் மதகுகளை சீர் செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும், வடிகால் சருக்கைகளை 2 அடி உயர்த்தியும், கரையை 3 அடி உயர்த்தியும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்இனிப்பு வழங்கிய விவசாயிகள்கேரளாவில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,830ம், சத்தீஸ்கரில் ரூ.2,540ம் வழங்கப்படுகிறது. எனவே கேரளா முதல்வர் பினராய் விஜயன், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகேல் ஆகியோரை பாராட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புக்கு மாற்றாக பேரீச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா பழங்கள் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழங்கப்பட்டன….

The post கரும்புக்கான சிறப்பு ஊக்க தொகை விரைவில் வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Thanjavur ,Kuradithir ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...