×

நாட்றம்பள்ளி அருகே காலை முதல் இரவு வரை நீடித்த பரபரப்பு கிணற்றில் விழுந்த கரடி ஏணியில் தானாக ஏறி வரும் என்று காத்திருந்த வனத்துறை-மீட்பு நடவடிக்கை மந்தமானதால் பொதுமக்கள் வாக்குவாதம்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த கரடி ஏணியில் தானாக ஏறி வரும் என்று வனத்துறையினர் காத்திருந்ததால், பொதுமக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை முதல் இரவு வரையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரி டேம் உள்ளது. இந்த டேம் அருகே உள்ள வீராகவுண்டனூர் பகுதியில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி 4 வயது கரடி ஊருக்குள் வந்ததுள்ளது. அப்போது அங்கிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் கரடி விழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது  கிணற்றில் கரடி தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து வெலக்கல்நத்தம் விஏஓவிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விஏஓ நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் கரடியை மீட்க ஏணியை கிணற்றில் இறக்கினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஏணி வழியாக கரடி மேலே ஏறி வரவில்லை. இந்நிலையில் அங்கு வந்த திருப்பத்தூர்  வனத்துறையினர் கரடி தானாக மேலே ஏறி வரும் என்று காத்திருந்தனர். இதற்கிடையே பொதுமக்களும், தீயணைப்புத்துறையினரும் அருகில் வீட்டில் இருந்த கயிற்றுகட்டிலை கிணற்றில் இறக்கிவிட்டு, மீட்க முயன்றனர். ஆனாலும் கரடியை மீட்க முடியவில்லை. இதையடுத்து ஏணியை மட்டும் கிணற்றில் விட்டுவிட்டு, எங்களிடம் கரடியை மீட்க எந்த உபகரணங்களும் இல்லை என்று தீயணைப்புத்துறையினர் சென்றுவிட்டனர். வனத்துறையினர், கரடியை மீட்க வலையோ, மயக்க ஊசியோ எதனையும் கொண்டுவரவில்லை. ஏணியை கிணற்றில் விட்டபடி, கரடி தானாக மேலே வரும் என்று இரவு 8.30 மணிவரையில் காத்திருந்தனர். இப்படியே அதிக நேரம் கரடி தண்ணீரில் இருந்தால் கரடி தண்ணீர் குடித்தே இறந்துவிடும் என்று பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிணற்றுக்குள் தென்னை மரத்தை போட்டு கரடி மேலே வர முயற்சி செய்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஒசூரில் இருந்து வனத்துறையை சேர்ந்த 3 டாக்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் வந்ததும் மயக்க ஊசி செலுத்தி கரடியை வெளியே கொண்டு வரப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் காலை தொடங்கி இரவு வரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post நாட்றம்பள்ளி அருகே காலை முதல் இரவு வரை நீடித்த பரபரப்பு கிணற்றில் விழுந்த கரடி ஏணியில் தானாக ஏறி வரும் என்று காத்திருந்த வனத்துறை-மீட்பு நடவடிக்கை மந்தமானதால் பொதுமக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Ratrampalli ,Nadrampalli ,Nadaramalli ,Dinakaran ,
× RELATED நாட்றம்பள்ளி அருகே 2 கார்கள் மோதிய...