×

மாவட்ட சுகாதார துறை சார்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு, நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு விழா, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தி, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் பேசியதாவது.காசநோய் என்பது மிக முக்கிய நோயாக கருதப்படுகிறது. இந்த நோய், இறப்புக்கு பெரிதும் காரணமாக நேரிடும். ஆனால், தற்போது 100 சதவீதம் சிகிச்சை பெறக் கூடிய ஒரு காசநோயாகும். இந்தியாவை பொருத்தவரை காசநோய் எத்தனை பேருக்கு உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். அது குறைவான எண்ணிக்கையில் உள்ளது. இந்த நோய்க்கான பரிசோதனையை அரசே முன்வந்து செய்கிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நோய் கண்டுபிடித்த பிறகு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாத்திரை வீதம் 6 மாதம் சாப்பிட வேண்டும். அதையும் தொடர்ச்சியாக சாப்பிட்ட வேண்டும். அப்போதுதான், நோயை 100 சதவீதம் குணப்படுத்த முடியும்.மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடக்கிறது. ஆவடியை பொறுத்தவரை இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 7 முகாம் நடத்தி முடித்த ஒரே மாநகராட்சி ஆவடி மட்டுமே. நோய் வருவதற்கு முன்பே, அதற்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது இந்த முகாமின் சிறப்பம்சம். தடுக்கக் கூடிய ஒரு நோய் என்று சொல்லக்கூடிய பல்வேறு தொற்றா நோய்கள் உள்ளன. அந்த நோய் வருவதற்கு முன் கண்டறிய முடியும் என்பதற்காகவே, இன்று கலைஞர் வருமுன் காப்போம் திட்ட முகாம் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் பங்களிப்பு மற்றும்  நம் மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய அளவில் உள்ளது என்பது மகிழ்ச்சியானது.அனைத்து சிறப்பு மருத்துவர்களும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வந்து முகாம் நடத்தி,  அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதாவது நோய் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து, அதில் நோய் கண்டறியப்பட்டால், அதனை எப்படி சரி செய்வது என்பதையும், அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்காகவே இந்த முகாம் நடக்கிறது என்றார்.முன்னதாக, காசநோயால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தலா ₹1,600 வீதம் ஊட்டச்சத்து மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கலெக்டர் வழங்கினார். மேலும், காசநோய் குறித்து விழிப்புணர்வு மலர், விழிப்புணர்வு தொடர்பான வில்லைகளை வெளியீட்டார்.நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் லட்சுமி முரளி, செந்தில்குமார், ஜவகர்லால், தேவி, ஆவடி மாநகர திமுக செயலாளர் பேபி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மாவட்ட சுகாதார துறை சார்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : District Health Department ,Aavadi ,World Tuberculosis Day ,Tiruvallur District Public Health and Preventive Medicine Department ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...