×

ஒகேனக்கல்லில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் மேகதாது அணை கட்டினால் நாங்கள் தகர்த்து எறிவோம்: மாநில தலைவர் சின்னசாமி பேட்டி

தர்மபுரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரியில் இருந்து வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பென்னாகரம் மடம் சோதனைச் சாவடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வாகன பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விவசாயிகள் பங்கேற்றனர். இப்பேரணி ஒகேனக்கல் சின்னாறு அருகே முடிவடைந்தது. அங்கிருந்து விவசாயிகள் ஊர்வலமாக நடந்து சென்று, நெடுஞ்சாலைத்துறை பயணிகள் மாளிகை அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற நோக்கத்தோடு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை ஒன்றிய அரசு கண்டும் காணாதது போல் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் தீர்ப்பையும் புறம்தள்ளி, இந்த அணையை கட்ட முயற்சி செய்து வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும், தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவாக இருப்போம். வரும் ஜூலை  5ம் தேதி நடைபெறும் உழவர் தின பேரணியின்போது, கர்நாடக அரசுக்கு எதிராக அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். அது எல்லை தாண்டிய போராட்டமாகக் கூட இருக்கலாம். தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மீறி மேகதாது அணையை கட்டினால், அந்த அணையை நாங்கள் தகர்த்து எறிவோம். இவ்வாறு சின்னசாமி கூறினார்….

The post ஒகேனக்கல்லில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் மேகதாது அணை கட்டினால் நாங்கள் தகர்த்து எறிவோம்: மாநில தலைவர் சின்னசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ogenakal ,President of State ,Chinnasamy ,Darmapuri ,Tamil Nadu Farmers Association ,Karnataka government ,Kaviri ,Cloudhead ,Ogenakkale ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...