×

வாடகைக்கு விடப்படும் வளாகம் பேரிடரால் வாழ தகுதியற்றதாகி விட்டால் வாடகையை வசூலிக்கக் கூடாது: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று சட்டசபையில் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். இதில் கூறப்பட்டிருப்பதாவது: சொத்து வளாகத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரருக்கு இடையே செய்த ஒப்பந்தத்தின் வரையறை மற்றும் நிபந்தனைகளின்படி வாடகையை ஒழுங்குபடுத்துவதையும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதையும் நோக்கமாக இந்தச் சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டம், அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் பதிவு செய்வதை கட்டாயப்படுத்துகிறது.இந்நிலையில் ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ள, மாதிரி குடிவார சட்டத்தில்-2021 கூறப்பட்டுள்ள சில ஆலோசனைகளின்படி, தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, உள்வாடகை மீதான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, வாடகைதாரர் தற்போதுள்ள வாடகை இடத்தை, ஒரு துணை உரிமை உடன்பாட்டை மேற்கொள்ளாமல் உள்வாடகைக்கு விடக்கூடாது.இந்த உடன்பாட்டை செய்வதற்கு முன்பு, வாடகைதாரர் தனது கைவசமுள்ள வளாகம் முழுவதையும் அல்லது அதன் பகுதியை உள்வாடகைக்கு விடக் கூடாது; வாடகை உடன்பாட்டில் தன்னுடைய உரிமையை மாற்றம் செய்தல் அல்லது குறித்தளித்தலும் கூடாது. உள்வாடகை அளிக்கப்பட்டு இருந்தால், அதற்கான உடன்பாட்டின் தேதியில் இருந்து 2 மாதங்களுக்குள் உள்வாடகை பற்றி வாடகை அதிகாரியிடம் சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இணைந்து தெரிவிக்க வேண்டும்.வாடகைக்கு விடப்படும் வளாகம், பேரிடரினால் (போர், வெள்ளம், வறட்சி, தீ, புயல், நில நடுக்கம் மற்றும் எந்த வகை இயற்கைப் பேரிடர்) வாழ தகுதியற்றதாகி விட்டால் அதை வாழ்வதற்கு தகுதியுள்ளதாக ஆக்கும் வரை வாடகையை வசூலிக்கக் கூடாது. அந்த சொத்தை பழுதுபார்க்கவில்லை என்றால், பிணைய வைப்பீடு மற்றும் முன்பணத்தை உரியவாறு கழித்து விட்டு, அறிவிப்பு காலம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் அதை வாடகைதாரருக்கு திருப்பிச் செலுத்திவிட வேண்டும். வாடகைதாரருக்கு எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வடிவிலோ அறிவிப்பை வழங்கிய பின்பே, இணங்கிய வகையில் வாடகைக்கு விடப்பட்ட வளாகத்திற்குள் நுழையலாம். சொத்து உரிமையாளர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு அந்த சொத்து உண்மையாகவே தேவைப்பட்டால் அதை மீண்டும் பெறுவதற்கும், வாடகைதாரரை வெளியேற்றுவதற்கும் வாடகை நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். அதிலுள்ள உண்மை நிலையை உணர்ந்து மனநிறைவடைந்தால் காலி இடத்தை வாரிசுதாரருக்கு ஒப்படைப்பதற்காக வாடகைதாரருக்கு எதிரான ஆணையை வாடகை நீதிமன்றம் வழங்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வாடகைக்கு விடப்படும் வளாகம் பேரிடரால் வாழ தகுதியற்றதாகி விட்டால் வாடகையை வசூலிக்கக் கூடாது: பேரவையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Bill ,Chennai ,Urban Development ,Minister ,S.Muthusamy ,
× RELATED பெரம்பலூருக்கு மருத்துவ கல்லூரி வருவது உறுதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்