×

காவல் ஆணைய தலைவரின் காரை மறித்து காவலரை வெட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது: சிசிடிவி உதவியுடன் போலீஸ் நடவடிக்கை

சென்னை: காவல் ஆணைய தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை தனது காரில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றார். கே.கே.நகர் வழியாக அசோக் நகர் சிக்னல் அருகே கார் வந்தது. அப்போது முன்னாள் நீதிபதியின் கார் முன்பு பைக்கில் அமர்ந்து இருந்த 3 பேர் முன்நோக்கி செல்லாமல் வெகுநேரம் ஒரே இடத்தில் நின்றிருந்தனர். இதை காரில் முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சக்திவேல்(52) பார்த்து, கீழே இறங்கி வந்து நீதிபதி கார் செல்லும் வகையில் வழி ஏற்படுத்த முயன்றார். அப்போது மதுபோதையில் இருந்த 3 பேரும் வழிவிடாமல் தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் காவலர் அவர்களின் பைக்கை சாலையோரமாக தள்ளி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த  3 பேரில் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் சக்திவேல் தலையில் ஓங்கி வெட்டிவிட்டு மூவரும் ஒரே பைக்கில் தப்பினர். புகாரின்படி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று 3 மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, முன்னாள் நீதிபதியின் பாதுகாவலரை போதை வாலிபர்கள் கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், ஜெ.ஜெ.நகர் பகுதியில் நேற்று ஆட்டோவை வழிமறித்து 3 பேர் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் தகராறில் ஈடுபட்ட 3 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேர் தப்பினர். அப்போது, அதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த புருஷோத்தமன்(29) என்பதும், வீடியோ பதிவில் உள்ள ஆசாமி எனவும் தெரியவந்தது. மேலும், இவர் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. புருஷோத்தமனை கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் அவரை கைது செய்து தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்….

The post காவல் ஆணைய தலைவரின் காரை மறித்து காவலரை வெட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது: சிசிடிவி உதவியுடன் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Former High ,C. TD ,CCTV ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...