×

கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து இயல்புநிலைக்கு திரும்பும் முன் சிலிண்டர் விலையை ஏற்றி மீண்டும் தவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது: ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: நாடு முழுவதும் நேற்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 76 காசு உயர்த்தி, எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயத்தின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.16க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால், சென்னையில் சிலிண்டர் விலை ரூ.965.50ஆக அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அளித்த பேட்டி: வசந்த், காய்கறி வியாபாரி (புழல்): பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு பாதிப்பில் இருந்து தற்போதுதான் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு வந்த நிலையில், இந்த விலை ஏற்றத்தால் மீண்டும் தவிக்கும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது. காஸ் விலை ஏற்றத்தால் பழையபடி விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.சிவகாமி, குடும்ப தலைவி, (துரைப்பாக்கம்): ஊரடங்கு காரணமாக கடந்த 2 வருடங்களாக போதிய வருமானம் இல்லை. குழந்தைகளின் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியது அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களை பற்றி கவலைப்படாத ஒரே அரசு மோடி அரசுதான். தா.கண்ணன், கட்டிட தொழிலாளி (மேடவாக்கம்): மாநில அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு வகைகளில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு மக்களை பல்வேறு வகைகளில் வதைத்து வருகிறது. குறிப்பாக காஸ், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதில் குறியாக இருக்கிறது.ராமராவ், மக்கள் விழிப்புணர்வு மையம் (நங்கநல்லூர்): பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் தவிப்பதை பற்றி ஒன்றிய அரசுக்கு எந்த கவலையும் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் விலையை கட்டுக்குள் வைத்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலையை உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அடித்தட்டு மக்களின் சிரமத்தை போக்காத அரசு நல்ல அரசே இல்லை. ரஞ்ஜினி, குடும்ப தலைவி (அண்ணாநகர்): ரூ.917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாதாந்திர செலவு அதிகரித்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கே.ராமமூர்த்தி, லேத் பட்டறை தொழிலாளி (தரமணி): காஸ், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. தற்போது பெட்ரோல்,  டீசல் லிட்டருக்கு 76 பைசா விலை ஏற்றத்தினால், அனைத்துப் பொருட்களும் விலை உயரும். காஸ் விலையை ரூ.50 உயர்த்தி இருப்பது ஏழை, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும். ஊரடங்கால் சம்பள உயர்வே இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தியது, மக்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். வி.கவிதா ராணி, குடும்ப தலைவி (மேற்கு தாம்பரம்): கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்கள், தற்போதுதான் மெல்ல மீண்டு வரும் நிலையில் காஸ் சிலிண்டர் விலை ரூ.50ம், பெட்ரோல், டீசலுக்கு 76 பைசாவும் விலை உயர்த்தினால், எப்படி சாமானிய மக்களால் குடும்பத்தை நடத்த முடியும். போதிய வருவாய் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில் இந்த காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டனத்திற்கு உரியது.நாகராஜ், அச்சக உரிமையாளர் (தண்டையார்பேட்டை): அன்றாட பணியில் ஈடுபடும் எங்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும். எனவே, பெட்ரோல், டீசல், காஸ் விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்….

The post கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து இயல்புநிலைக்கு திரும்பும் முன் சிலிண்டர் விலையை ஏற்றி மீண்டும் தவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது: ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Corona ,Union Government ,Chennai ,Oil Enterprise Federation ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...