×

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்):  நாட்டில், 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை நிர்ணயத்தின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.16, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 967 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிய பா.ஜ. அரசின் இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்.விஜயகாந்த்(தேமுதிக தலைவர்):விலையேற்றத்தால்  ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி  உயர்ந்து வரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, அதன்  விலையை மேலும் உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இலங்கை  நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியை போன்று, இந்தியாவிலும்  ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும், பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  எனவே, பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு  சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு  உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக  அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம் மாநில செயலாளர்): அனைத்து முனைகளிலும் விலை உயர்வை ஏற்படுத்தி அனைத்து பகுதி மக்களையும் கசக்கி பிழியும் அட்டூழியமான நடவடிக்கையாகும். மக்கள் நலன் பற்றி எவ்வித அக்கறையுமற்ற ஒரு அரசாங்கமாக ஒன்றிய அரசு மோடி தலைமையில் நடத்தி வரும் மற்றுமொரு குரூரமான தாக்குதல் இது. ஒன்றிய அரசு, தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக விலை ஏறாமல் பார்த்து கொள்வதும், தேர்தல் முடிந்தவுடன் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று பொய்யான காரணங்களை சொல்லி தாறுமாறாக விலையேற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.அன்புமணி ராமதாஸ் எம்பி(பாமக இளைஞர் அணி தலைவர்): சமையல்  எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டின்  9 தவணைகளில் ரூ.255  உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்):  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த  தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்….

The post பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : nadu ,Chennai ,Tamil Nadu political party ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில்...