நெல்லை : நெல்லையில் நடந்துவரும் புத்தக திருவிழா கண்காட்சியில் 5வது நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பஸ், வாகனங்களில் வந்து குவிந்தனர். பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்லி கல்வி முறை மற்றும் செவித்திறன் மாணவர்களுக்கான சைகை மொழி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழா பாளை வஉசி மைதானத்தில் நடந்து வருகிறது. புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கிய நாள் முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருவதுடன் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். புத்தக திருவிழாவின் 5வது நாளான நேற்று (திங்கள்) பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார், பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில் வந்து குவிந்தனர். அவர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டதுடன் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை விரும்பி வாங்கிச் சென்றனர். கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.சிறப்பு நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கில் பார்வையற்ற மாணவர்கள் பயிலும் பிரெய்லி கல்வி முறை குறித்து பிற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பார்வையற்ற மாணவர்கள் ஏராளமானோர் தொடு உணர்வு மூலம் சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆர்வமுடன் விளையாடினர். இவர்களது திறமையை பார்த்த மற்ற மாணவ மாணவிகள் வி யந்து பாராட்டினர். இதுபோல் பாளை பிளாரன்ஸ் ஸ்வைன்சன் காது கேளாதோர் பள்ளி சார்பில் செவித்திறன் குறைபாடு தொடர்பான சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பள்ளி ஆசிரியர்கள் விஜி கிரேஷ், ஜெயம் ஜெனிட்டா, ஜோயல் தினகரன், ஜெபாகுமார் ஆகியோரும், பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், ஆசிரியர்கள் புஷ்பராகம், கனகமணி கில்டா, அனிதா ரோசிலின், ரிஸ்கர் பெனிடா, பெரியசாமி, ராமலிங்கம், ஜன்னட் ரத்னா, பூர்ணகுமாரி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்திருந்தார். இன்று வாழை நார் மூலம் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அகழ்வாராய்ச்சி புத்தகம் வாசிப்புபுத்கத்திருவிழாவில் உலக சாதனைக்காக 24 மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சி தனிமேடையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று பலமணி நேரம் புத்தகம் வாசித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். நேற்று பாளை காதுகேளாதோர் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் வந்து நீண்டநேரம் பல புத்தகங்களை ஆர்வமுடன் வாசித்தனர். குறிப்பாக கொற்கை, சிவகளை உள்ளிட்டப்பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு புத்தகங்களை கேட்டு வாங்கி ஆவலுடன் படித்தனர்….
The post கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நெல்லை புத்தக திருவிழாவில் திரளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் appeared first on Dinakaran.
