×

குடிநீர், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்-மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

திருப்பூர் :  திருப்பூர் மாநகராட்சியின் முதல் கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணைமேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்றத்தில் பார்வைக்கு முதலமைச்ருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் வைக்கப்பட்டு, அதன் மீது நடந்த விவாதங்கள் வருமாறு:ராதாகிருஷ்ணன்(தி.மு.க): மக்கள் சேவைகளை மேம்படுத்த ஜனநாயக முறையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நமது மாநகராட்சியை பொருத்தவரை குடிநீர் பிரச்னைக்கு கடந்த காலங்களில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில் சிறப்பான நிர்வாகம் அமைந்துள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை என உள்ள குடிநீர் வினியோகம் சரி செய்யப்பட வேண்டும். குப்பை, பாதாள சாக்கடை, சாலை வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும். தேர்தல் நடக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக பல பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தமிழகத்திலேயே முதன்மை மாநகராட்சி என்ற பெயரை பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இல.பத்மநாபன் (தி.மு.க): 41வது வார்டு:  திருப்பூர் மாநகராட்சியை குப்பை, குடிநீர் பிரச்னை இல்லாத மாநகராட்சியாக மாற்றினாலே போதும், மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய நிலை ஏற்படும். குடிநீரை நான்கு நாட்களுக்கு ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை, சாலை பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும். கோவிந்தசாமி (தி.மு.க): நீண்ட இடைவெளிக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்து, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளால் இந்த சபை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் எதிர்பார்ப்புகளை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்தவித அடிப்படை தேவைகளும் செய்து தரவில்லை. அதை சொல்லக்கூடிய வாய்ப்பும் மக்களுக்கு கிடைக்கவில்லை. குடிநீர், குப்பை, சக்கடை பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மக்கள் பிரச்னைகளை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ராஜேந்திரன் (இ.கம்யூ.,): மாநகராட்சியில் குப்பை வரி போடப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் வரியாக இருக்கும் பட்சத்தில், ரூ.7 ஆயிரம் குப்பை வரி உள்ளது. இதை யார் முடிவு செய்தார்கள். வரி வசூல் ஆகாததற்கு குப்பை வரி தான் காரணம். கொரோனாவால் தொழில் பாதிப்படைந்துள்ள நிலையில், குப்பை வரி எப்படி கட்டுவார்கள். குப்ைப வரியை நிறுத்திவிட்டு, மற்ற வரியினங்களை வசூல் செய்ய வேண்டும். எனது வார்டில் போதுமான குப்பை பாக்ஸ்கள் போதுமான அளவில் இல்லை. குடிநீர் விநியோகத்தை நான்கு நாட்களுக்கு ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகராஜ் (ம.தி.மு.க): கவுன்சிலர்களிடம் மக்கள்  அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். அனைத்து பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நினைக்கிறார்கள். பாதாளசாக்கடை தோண்டிய பகுதிகளில் மண் கழிவுகள் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால் குழந்தைகள் நோய்வாய் படுகிறார்கள்.  சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. இதை சரி செய்யாவிட்டால் எங்களுக்கும், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருந்து வரும் நமது முதல்வருக்கும் பெயர் கெட்டுவிடும்.  அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க):  மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். மீன்மார்க்கெட் டெண்டரில் ஒரே ஒருவர் உரிமம் கோரியுள்ளார். அங்கு பல கடைகள் உள்ளன. தனித்தனியாக விட்டால் மாநகராட்சிக்கு அதிக வருமானம் வரும். ஆகையால் தனி நபருக்கு குத்தகைக்கு விடக்கூடாது. இதேபோல் ஆடு வதைக்கூடத்தையும் மண்டல வாரியாக பிரித்து வழங்க வேண்டும். ஆகவே இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.செந்தில்குமார் (காங்கிரஸ்): உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். முதல்வர் அவர்கள் பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம். இதேபோல் கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றிய மாநகராட்சி கமிஷனர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களுக்கும் ஒரு நன்றி தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். செல்வராஜ் (இ.கம்யூ.,): மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள் செய்யும் பணிகள் தரமாக இருப்தில்லை. 4வது குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும்போது குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. இதை பார்வையிட தனியாக அதிகாரிகள் உள்ளார்களா? இதேபோல் தெருவிளக்கு பிரச்னை. பாதாள சாக்கடை திட்டம் 11வது வார்டு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,) தி.மு.க.தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, உள்ளாட்சித் தேர்தலை நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி. மாநகராட்சியில் குப்பை பிரச்னை அதிக அளவில் உள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. டன் கணக்கில் குப்பை சேகரமாகும். ஆனால் போதுமான துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை. நிரந்தர தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய நிலையில் 300 பேர் தான் இருக்கிறார்கள். குப்பை பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பதோடு, குடிநீர், சாலை, தெருவிளக்கு பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.செந்தூர்முத்து (தி.மு.க): எனது வார்டுக்கு உட்பட்ட மின்மயான ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. செப்டிக் டேங்க் லாரிகள் கழிவுநீரை, நொய்யல் ஆற்றில விடுகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலிபாளையம் பகுதியில் ஒரே ஒரு பொது கழிப்பிடம் தான் உள்ளது. ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆகவே, கூடுதல் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.     சாந்தாமணி (ம.தி.மு.க): எனது வார்டில் குடிநீர், குப்பை, தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. ஆகவே, இப்பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்குமார் (திமுக): தேர்தலில் எனது வார்டில் 73 சதவீதம் வாக்கு பெற்றேன். வாக்களித்தவர்களுக்கு நன்றி. பாளையக்காட்டில் பாலம் கட்டும் பணி, 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, தாங்கள் எனது வார்டில் ஆய்வு செய்து அப்பணியை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பால், எனது வார்டில் உள்ள உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. புதிதாக ரோடு போடாவிட்டாலும், இருக்கும் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: உங்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும். 4வது குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக முதல்வர் வழிகாட்டுதலோடு, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் சிரத்தை எடுத்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் இந்த முயற்சி காரணமாக இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். மாநகராட்சி அதிகாரிகளுடன் நாம் ஒன்றிணைந்து மக்கள் பணிகளை செயல்படுத்துவோம். வருவாய் இனங்களை பெருக்குவதற்கும் உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நமக்கு நாமே திட்டத்தை ெபாறுத்தவரை தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் திருப்பூர் மாநகராட்சி இருக்கிறது. சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் நமது மாநகராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக உருவாக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும். கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று 16வது தீர்மானத்தில் உள்ள மீன் மார்க்கெட் கட்டணம் வசூலித்தல் டெண்டர் வாபஸ் பெறப்படுகிறது. இதேபோல், 19வது தீர்மானத்தில் காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்யும் டெண்டர் வாபஸ் பெறுவதில் நிர்வாக சிக்கல் இருப்பதால், ஒப்பந்ததாரருக்கு கால அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்புதிருப்பூர் மாநகராட்சியில் மேயர், துணைமேயர் தவிர்த்து 58 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த மாநகராட்சியின் முதல் கூட்டம் காலை சரியாக 10.15 மணிக்கு தொடங்கியது. கூட்டம் ஆரம்பித்தவுடன் மூத்த உறுப்பினர்கள் மூன்று பேருக்கு பேச வாய்ப்பளித்த மேயர் தினேஷ்குமார், தொடர்ந்து மூன்று பெண் கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பளித்தார். தொடர்ந்து கட்சி பாகுாபாடின்றி ஒவ்வொருவராக அனைத்து கவுன்சிலர்களுக்கும் பேச வாய்ப்பளித்த அவர், அவர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு பதிலளித்தார். இதன் காரணமாக மதியம் 2.45 மணிக்கு தான் கூட்டம் முடிந்தது.கூச்சல், குழப்பம்அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்ததால் இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார், இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மேயர் தினேஷ்குமார் குறுக்கிட்டு, அனைத்து கவுன்சிலர்களுக்கும் பேச வாய்ப்பளிக்கும் வகையில், தங்களது வார்டு பிரச்னைகளை மட்டும் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இச்சம்பவத்தால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது….

The post குடிநீர், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்-மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Corporation ,Corporation's Coalition ,Mayor ,Dineshkumar ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...