×

ஜூனில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாகர்கோவில்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வு கூட்டம், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு  பேசினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் வக்கீல் மகேஷ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:தொற்றா நோய் பாதிப்புகளால் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ‘‘மக்களை தேடி மருத்துவம்’’  திட்டத்தால் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறையும்.  தமிழகத்தில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்த இந்த ஆண்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி 20 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி கிடைக்கப் பெற்று உள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது 10க்கும் மேற்பட்டவர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெறுவது தெரியவந்தது. தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிகமான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். எனவே கடைகளில் பூச்சி மருந்தை வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், தனி நபர்களுக்கு பூச்சி மருந்து மற்றும் சாணி பவுடர் விற்க கூடாது என்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.  காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.  அது மும்பையில் உள்ள மகாத்மா காந்தி கேன்சர் இன்ஸ்டிடியூட் போன்ற சிறப்பான ஒன்றாக செயல்படும்.   தமிழகத்தில் குமரி, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறைவான சதவீதமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த 5 மாவட்டங்களிலும்  தடுப்பூசி போடும் பணியை  தீவிரப்படுத்த வேண்டும். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரளாவிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பாதிப்பு இல்லை, எனினும்  ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post ஜூனில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Nagarko ,Department of Medicine and People's Well-Being ,Office ,Manodankaraj ,Dinakaran ,
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...