×

3 நாட்கள் போராடி அணைத்த நிலையில் வலம்புரிவிளை குப்பைகிடங்கில் மீண்டும் பற்றி எரியும் தீ-மேயர் மகேஷ் ஆய்வு

நாகர்கோவில் : வலம்புரிவிளை குப்பைகிடங்கில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 நாட்கள் போராடி அணைத்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்தது.  மேயர்மகேஷ்  ஆய்வு மேற்கொண்டார்.   நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தினமும் 110 டன் முதல் 130 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் வலம்புரிவிளை குப்பைகிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது மாநகர பகுதியில் 11 நுண்ணுயிர் உரமாக்கும் கூடம் அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்குவைத்து உரமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த அளவு குப்பைகள் வலம்புரிவிளை குப்பைகிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது.  வலம்புரிவிளை குப்பைகிடங்கில் 1 லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகள் பயோமைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் வலம்புரிவிளை குப்பைகிடங்கில் தீ பிடித்து எரிந்தது.நாகர்கோவில், தக்கலை, திங்கள்சந்தை ஆகிய தீயணைப்புநிலைய வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அணைத்தனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மீண்டும் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ பிடித்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று மாலை மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ் வலம்புரிவிளை குப்பைகிடங்கில்,  தீயை அணைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு, துரிதநடவடிக்கை எடுத்து அணைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: வலம்புரிவிளை குப்பைகிடங்கில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் 4 வாகனம் மூலம் அணைத்து வருகின்றனர். 4 பொக்லைன் எந்திரம் கொண்டு குப்பைகளை அகற்றி, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி வாகனம் 3, தனியார் வாகனம் 2 ஆகியவை மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 40 தீயணைப்பு வீரர்கள், 20 மாநகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். வலம்புரிவிளையில் உள்ள குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகிறது. தற்போது 2 எந்திரங்கள் மூலம் குப்பை அகற்றப்படுகிறது. மேலும் 2 எந்திரங்கள் என மொத்தம் 4 எந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படவுள்ளது, இன்னும் ஒரு வருடத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேயருடன் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர்நல அதிகாரி டாக்டர் விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் வந்தனர்….

The post 3 நாட்கள் போராடி அணைத்த நிலையில் வலம்புரிவிளை குப்பைகிடங்கில் மீண்டும் பற்றி எரியும் தீ-மேயர் மகேஷ் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Valampurivilai ,Mayor ,Mahesh ,Nagercoil ,
× RELATED இங்கிலாந்து மேயராக சென்னை தமிழ் பெண்