×

காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க குந்தா வனச்சரகத்தில் 20 கி.மீ. தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள்: சாலையோரங்களில் சமையல் செய்ய தடை

மஞ்சூர்: குந்தா வனச்சரகத்தில் காட்டு தீ ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கி.மீ. துாரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கடந்த நவம்பர் முதல் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த பனியின் தாக்கத்தாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, வனப்பகுதிகளில் மரம், செடி,கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கருகி போயுள்ளது. இதனால், எளிதில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. நேற்று முன் தினம் மஞ்சூர் தாலுகா அலுவலகம் அருகே திடீரென காட்டுத்தீ பரவியது. இதில், வருவாய்துறைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் புல்வெளிகள், செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி காட்டுத்தீயை முழுவதுமாக அணைத்தனர். இதைத்தொடர்ந்து, குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ பரவலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கூறியதாவது:குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வனச்சரகத்திற்குட்பட்ட தாய்சோலா பீட் மற்றும் கீளுர் பீட் ஆகிய வனப்பகுதிகளில் சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனத்துறையின் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் வனப்பகுதிகளில் நடமாடவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளை ஒட்டிய சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி சமையல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் வேண்டும் என்றே தீ வைப்பவர்கள் குறித்து தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க குந்தா வனச்சரகத்தில் 20 கி.மீ. தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள்: சாலையோரங்களில் சமையல் செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Kunta forest ,Kunda Forest ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...