×

புல்லட் சாமி டெல்லிக்கு போகாமல் தவிர்க்கும் மர்மத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கூட்டணியில் ஆட்சிக்கு வந்தும் டெல்லிக்கே செல்லாமல் புல்லட்சாமி அடம் பிடிப்பதன் காரணத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள், ஆள்பவர்கள் இன்னமும் அதிகாரிகளாகவே இருக்கிறார்கள். யூனியன் பிரதேசத்தில் தொடர்பான திட்ட அறிக்கையை ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு அனுப்பினாலும், அதை அதிகாரிகள் அப்படியே ஏற்காமல், கேள்வி கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்பியபடியே இருக்கிறார்களாம்.  யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம்தான் காரணம் என்று அமைச்சர்களே ஓப்பனாக புலம்புறாங்க. இதனால் புதுசா நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதால், ஒரு அனா பைசாவுக்கு கூட மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லையாம். இவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதில் புல்லட்சாமி நூறு சதவீதம் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் அதற்கு புல்லட்சாமி டெல்லி செல்ல வேண்டும். முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டினை நிறைவு செய்யவுள்ள நிலையில் இன்னமும் பிரதமரை சந்திக்க செல்லவில்லை. அவரை சந்தித்தால் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கூறுகின்றனராம். ஆனால், டெல்லிக்கு போகமாட்டேன் என்பதில் புல்லட்சாமி உறுதியாக இருக்கிறாராம். என்ன காரணமாக இருக்கும் என்று விசாரித்தால், இரும்பை இழுத்து ஒட்டிக்கொள்ளும் காந்தம் போல தங்கள் கட்சியையும் தாமரை என்ற காந்தம் தன்னுள் இழுக்க பார்க்கிறதாம். புல்லட்சாமி முதல்வராக இருந்தாலும் முழுக்க தாமரை ஆட்சியாக நடக்க வேண்டும் என்று டெல்லி நினைக்கிறதாம். இதனால்தான் டெல்லிபோகாமல் இருப்பதற்கான மர்ம காரணமாக பேசிக்கிறாங்க. அதேபோல் டெல்லி தலைமையை பார்க்காத புல்லட்சாமிக்கு வரம் கிடைக்கவில்லையாம். எல்லோரும் சேர்ந்து டெல்லிக்கு வாங்க.. வாங்க என்றாலும் என்னை விடுங்க நீங்க போங்க… என காரில் ஏறிவிடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘குமரிக்கு போனால் கரன்சியில் குளிக்கலாம்னு சொல்றாங்களே, நிஜமா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி வழியாக நெல்லை மாவட்டத்தில் இருந்து விதிகளை மீறி கனிமங்கள் தினசரி ஏராளமான லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு கடத்தப்படுகிறதாம். பாறைகள், ஜல்லி கற்கள் மற்றும் கிரஷர் பொடிகளை அனுமதிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகம் கொண்டு செல்வதால், குமரி சாலைகள் பழுதாகி இருக்காம். இதுகுறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழுவாக யாரும் செல்லவில்லையாம். ஆங்காங்கே போலீசார் சிறிய அளவில் வசூல் செய்து வந்த நிலையில் ஆரல்வாய்மொழி தொடங்கி கேரளா எல்லை வரை வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு டாரஸ் வண்டிக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பாக்கெட்டில் நிரப்பிக் கொள்கிறார்களாம். அதுமட்டுமல்ல, பகலை விட இரவில்தான் டாரஸ் லாரிகள் அதிவேகத்தில் பறக்கின்றன. முன்பு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வந்தனர். தற்போது, கேரள டாரஸ் லாரிகள் கவனிப்பால், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் டிரைவர் இரவு 7 மணிக்கு மேல், சோதனை செய்யக்கூடாது என ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளை மிரட்டி வைத்துள்ளாராம். உயர் அதிகாரிகளையே மிரட்டி வைத்து விட்டு, தன்னந்தனியாக வசூல் மழையில் நனைகிறாராம். இவர் தனக்கென ஒரு பாதையை நிர்ணயித்து செயல்படுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கடமைகளை செய்வதில் கூட வெத்து விளம்பரம் செய்து ஸ்கோர் செய்ய நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளை என்ன சொல்வது…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் வெயிலூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இலை கட்சி, பூ கட்சி கவுன்சிலர்கள் கால்வாய் தூர்வாருதல், குப்பை அகற்றுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ததாக கூறி சமூக வலைதளத்தில் போட்டு சுய விளம்பரங்கள் செய்கின்றனராம். இதது இவர்களின் கடமை தானே, அதற்கு செலவிடும் நேரத்தில் நாலு தெருவில் சுற்றி ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளலாமே என்கிறார்கள் ஓட்டு போட்ட வாக்காளர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிக்கலில் மாட்டி சிக்கி திணறும் அதிகாரியை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக துவாரம் பெயர் கொண்டவர் அதிகாரியாக உள்ளாராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஜி அமைச்சர் பெல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு நடந்தபோது, இவரது வீட்டிலும் ரெய்டு நடந்தது. மாஜி பெல் அமைச்சராக இருந்தபோது, இவர்தான், கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக இருந்தார். தற்போதும் இவர்தான் உள்ளார். ‘அசைக்க முடியாத ஆபீசர்’ என்ற பெயருடன் வலம் வரும் இவர், கொரோனா காலத்தில் சானிடைசர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்கி கரன்சிகளை தங்கம், வீடுகளாக மாற்றிவிட்டாாராம். அரசு டெண்டரை யாருக்கு தருவது.. எவ்வளவு கமிஷன் பெறுவது என தீர்மானிப்பதும் இவர்தானாம். இப்படி, பல கோடி ரூபாய் வாரி சுருட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடந்துள்ளது. இச்சோதனையின்போது, பல முக்கியமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் அள்ளிச்சென்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளில், கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த ஊழல் எவ்வளவு என டெண்டர் பைல்களில் அடிப்படையில், போலீசார் இவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், இந்த அதிகாரி திகைத்து நிற்கிறார் என்றார் விக்கியானந்தா.      …

The post புல்லட் சாமி டெல்லிக்கு போகாமல் தவிர்க்கும் மர்மத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullet Sammy ,Delhi ,Bullatsamy ,Lotus alliance ,Uncle ,Peter.''Rulers ,Puducherry ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...