×

திருமங்கலம் அருகே கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

திருமங்கலம் : திருமங்கலம் அருகே பழமையான அய்யனார் சிற்பம் மற்றும் நடுகல் கண்டறியப்பட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் உள்ளது சித்தூர். இப்பகுதியில் மதுரையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர், பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில், ஆர்வலர்கள் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது கண்மாய் கரையில் பாதி புதைந்த நிலையில் கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம், கிபி 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டறியப்பட்டது.இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறும்போது : இப்பகுதி பாண்டியர் ஆட்சி காலத்தில் வீரநாராயண வளநாடு எல்லைக்குட்பட்ட பொற்பாத தேவி சதுர் மங்கலம் என்றும், இங்கு பழமையான சிவன் கோயிலில் சித்தர்கள் தவம் செய்ததாகவும், சித்தர் பெயரில் சித்தூர் பெயர் மருவியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வூரின் கண்மாய் மடைப்பகுதி அருகே 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்ட பாதி புதைந்த நிலையில் அய்யனார் சிற்பம் காணப்படுகிறது. தலைப்பகுதியில் அடர்த்தியான ஜடாபாரம், இரண்டு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிகலன்களுடன் மார்பில் முப்புரி நூலுடன் இச்சிற்பம் அமைந்துள்ளது.இடுப்பில் கச்சுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தி, வலது காலை தொங்கவிட்டு, வலது கரத்தில் கடக முத்திரை கொண்ட செண்டை ஆயுதம் சிதைந்த நிலையில், இடது கையை தனது தொடையின் மீது வைத்து அழகாக காட்சி தருகிறார். இதன் காலம் கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இதேபோல், சங்ககால முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடும் முறை இருந்தது. சித்தூரில் கண்டறியப்பட்டுள்ள இந்த நடுகல் 4 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டுள்ளது. வீரனின் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாள், வலது கையில் நீண்ட பட்டாக்கத்தியும், இடது கையில் இடுப்பில் செருகப்பட்ட வாளை பிடித்தவாறு நடுகல் வீரன் காட்சி தருகிறார். நீண்ட தலைப்பாகை கொண்டு காது, மார்பில் அணிகலன்கள் அணிந்து, கை மற்றும் காலில் வளையல் அணிந்து நின்றவாறு வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைப்பை கொண்டு இதன் காலம் கி.பி 16ம் நூற்றாண்டு என அறியப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்….

The post திருமங்கலம் அருகே கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam GP ,Thirumangalam ,Kullikudi ,Thirumangalam, Madurai District ,GP ,
× RELATED மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத...