×

மதுரை பால் பண்ணை வளாகத்தில் ரூ.65.89 கோடியில் ஆவின் ஐஸ்கிரீம் ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை சார்பில் மதுரை பால் பண்ணை வளாகத்தில் 65 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9316 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.சென்னை, அம்பத்தூரில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஐஸ்கிரீம் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்குத் தரமானதாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கக் கூடிய வகையில் உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆவின் நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் நிதியிலிருந்து 65 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 100 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தேசிய பால்வள வாரியத்தின் மூலம் மதுரை பால் பண்ணை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலையில் 50 மி.லி., 100 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளிலும் மற்றும் நுகர்வோர்களுக்கு தேவைகேற்ப அளவுகளில் ஐஸ்கிரீம் சிப்பமிடும் வசதிகளுடன், பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் குல்ஃபி ஐஸ்கிரீம் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அவை தென் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படும், இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post மதுரை பால் பண்ணை வளாகத்தில் ரூ.65.89 கோடியில் ஆவின் ஐஸ்கிரீம் ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Aavin Ice Cream Factory ,Madurai Dairy Complex ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Chief Secretariat ,Madurai ,dairy complex ,Aavin ,cream factory ,Madurai dairy ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...