செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொடர்ந்து கார்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில், கடந்த 2 வாரத்துக்கு முன் வீட்டின் முன்பு, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த 6 கார்கள் திடீர் மாயமானது. இதுகுறித்து புகார்கள் அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன் தலைமையில், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், எஸ்ஐக்கள் நெடுமாறன், செல்வம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, மறைமலைநகர் அருகே மல்ரோசாபுரத்தில் சந்தேகப்படும்படி சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அன்பேரில் போலீசார், நேற்று அதிகாலையில், அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிய 3 பேரை, சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், சென்னை அருகே அம்பத்தூரை சேர்ந்த பிரபுராஜ் (46), திருச்சி அருள்முருகன் ( 47), திருச்சி புத்தூர் முருகானந்தம் (54) என தெரிந்தது. மேலும் விசாரணையில், பகல் நேரங்களில், தெரு தெருவாக சுற்றி திரிவார்கள். அப்போது, எந்தெந்த பகுதிகளில் விலை உயர்ந்த ெசாகுசு கார்கள் நிறுத்தப்படுகின்றன என கண்டு வைத்து, சமயம் பார்த்து அதை திருடி சென்று, குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, 6 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹70 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
The post வாகனகள் திருடிய 3 பேர் கைது: 6 சொகுசு கார்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
