×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆடைகள் தயாரிப்பு பணி மும்முரம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு குன்னத்தூர் சத்திரத்தில் அழகர் ஆடைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏப்.16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கள்ளழகர் வேடமணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்வர். லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றிலும், அதன் கரையிலும் நின்று கள்ளழகரை தரிசிப்பர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதி இன்றி திருவிழா நடந்தது. தொற்று குறைந்ததையடுத்து இந்தாண்டு பக்தர்கள் அனுமதியுடன் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளதால் இந்த வருடம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.சித்திரை திருவிழாவில் அழகர் வேடம் பூண்டோர் அணியும் ஆடைகள், வேட பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபத்தில் கடந்த காலங்களில் நடந்தது. தற்போது அங்குள்ள கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டு, ஆடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தையல் தொழிலாளி கண்ணன் கூறுகையில், ‘சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் அழகர் வேடமணிந்து கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். குடும்பநலன், தொழில்வளம் பெருக நேர்த்திக்கடனாக அழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சியடிப்பது அதிகரித்துள்ளது. இந்த வருடம் திருவிழா நடக்க இருப்பதால் மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பங்கேற்பதால் அழகர் வேடமணியும் ஆடைகள் வாங்க அதிக ஆர்டர் குவிந்துள்ளது. ரூ.600 முதல் இந்த வருடம் விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்….

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆடைகள் தயாரிப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Sitrishna festival ,Madurai ,Kunnattur ,Madurai Sitrisha festival ,of Krishna ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!