×

சேலம்காரர் திட்டத்தால் தேர்தலில் பணத்தை இழந்து தவிக்கும் இலை கட்சி நிர்வாகிகளின் கவலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டாக்டரை கண்டு தாமரை கட்சியினர் ஏன் மிரண்டு போய் இருக்கிறார்கள்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர மாவட்டத்தில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கடந்த சட்டமன்ற  தேர்தல் நேரத்தில் தாமரை கட்சிக்கு தாவினார் மருத்துவர் ஒருவர். அவருக்கு பின்னாடி ஒரு படையே இருக்கிறது என்று தப்பு கணக்கு போட்டு உடனே சீட் கொடுத்தது தாமரை கட்சி. தனது செல்வாக்கு, சமூக ஆதரவுடன் ‘ப’ வைட்டமினை தாராளமாக இறக்கி வெற்றி பெறலாம் என நினைத்தார். தேர்தலில் தோற்றார். அதற்கு பிறகுதான் டிவிஸ்டே இருக்கு.. தேர்தல் சமயத்தில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்காக அவருக்கு மாநகர் மாவட்டத்தலைவர் பதவியை கட்சி மேலிடம் கொடுத்தது. பதவிக்கு வந்ததும்,  அங்கு ஆண்டாண்டு காலமாக பொறுப்பில் இருந்த சீனியர்கள் முன்னாள், மாவட்டத்தலைவர், நிர்வாகிகள் அத்தனை பேரையும் ஓரம்கட்டி ஒதுக்கிவிட்டாராம். தனக்கு வேண்டிய ஆதரவாளர்களுக்கு மட்டும் மாநிலத்தலைவர் மூலம், கட்சி பதவி வாங்கி கொடுத்து வருகிறாராம். இது முன்னாள் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடத்தும் நிகழ்ச்சியில் அவர்கள்  யாரும் கலந்து கொள்வதில்லை. தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். இதுபற்றி மாவட்டத்தலைவரான டாக்டர் கண்டுகொள்வதில்லையாம். இவரது நடவடிக்கைகளால் மதுரை மாவட்ட சீனியர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இவரை தட்டிக் கேட்காத மாநிலத் தலைமை மீதும் கோபம் இருக்கிறதாம். கட்சி மேலிடத்திற்கு தொடர்ந்து புகார் அனுப்பி வருகிறார்களாம்… இனிமேலும் நடவடிக்கை இல்லையென்றால்… நிர்வாகிகள் சைலன்ட் மோடுக்கு மாற முடிவு செய்து இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலம்காரரால் பணத்தை இழந்து தவிக்கிறவங்க புலம்பல் அதிகமாயிருக்காமே..’’‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாங்கனி மாநகராட்சி தேர்தலில் களம் இறங்கிய இலை கட்சி வேட்பாளர்கள், படுதோல்வியை சந்தித்தனர். தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகு இலை கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு விருப்பமே இல்லையாம். அதை பார்த்த சிலர் அண்ணன் சொந்த மாவட்டத்தில் சேலம்காரருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்வதா… சேலத்துக்கு எவ்வளவு செய்து இருக்கிறார்… தேர்தலில் நிற்கிறீங்க.. அண்ணன் பெயர் சொன்னாலே ஈசியா ஜெயித்துவிடலாம்னு ரொம்பவே கற்பனையில் இருந்து, அதே கற்பனையில் கடனை வாங்கி வார்டில் வாக்காளர்களுக்கு நிறைய இறைத்தோம். 40 பக்க நோட்டில் இடம் இல்லாத அளவுக்கு கரன்சியை கரைத்து இருக்கிறோம். ஆனால், இப்படி சேர்த்து வைத்த, கடன் வாங்கிய பணத்தை எல்லாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம். சேலம்காரர்தான் எப்படியாவது எங்களை கரையேற்றி காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் எங்கள் பகுதியில் கடன்காரர்களுக்கு பயந்து பதுங்காமல், தைரியமாக அரசியல் செய்ய முடியும். அதுவும் இல்லாம, நாம ஆட்சியில இருக்கிறப்போ,  நகர்ப்புற தேர்தலை நடத்தச் சொல்லி எவ்வளவோ மன்றாடினோம், அப்பயெல்லாம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்குன்னு சொல்லியே காலம் தாழ்த்தி விட்டாரு இணையானவர். இப்ப ஆட்சி இல்லாத நிலையில் போட்டியிட்டு சேர்த்த பணத்தையெல்லாம் தொலைச்சிட்டு நிற்கிறோமுனு முக்கிய முன்னணி நிர்வாகிகளிடமே  நேரடியாக சில மாஜி கவுன்சிலர்கள் சொல்லிட்டாங்களாம். இந்த தகவல் விவிஐபி காதுக்கும் போயிருக்காம். அவரும், சரிப்பா.. அடுத்து பார்த்துக்கலாம்னு  புலம்பும் நிர்வாகிகளை தேற்றி அனுப்புகிறாராம்… ஆறுதல் தேவையில்லை தலைவரே… கரன்சி தான் இப்போதைக்கு தேவை என்று புலம்பிட்டு வந்து இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வாகன பிரிவில் கல்லா கட்டும் காக்கியை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கி துறையில் ஆயுதப்படை பிரிவில் கல்லா கட்டும் ஏட்டு மீது பரவலான புகாராம். சிவனின் பெயரைக் கொண்ட ஏட்டு, ஆயுதப்படை வாகன பிரிவு அட்மினாக இருந்து வருகிறாராம். வசூல் கொழிக்கும் பணிக்கு டிரைவரை அனுப்புவதிலும், டீசல் போடுவதிலும் கல்லா கட்டி வரும் ஏட்டு, தலைமையையும் கவனிப்பதால், அவரின் ஆட்டம் அதிகமாயிடுச்சாம். இதனால் கஷ்டப்படும் காக்கியினர் கப்பம் கட்ட முடியாமல் புலம்பி வருகிறார்களாம்… அவர் மேல எந்த பெட்டிஷன் போட்டாலும் அவருக்கே திரும்பி வருதாம். அதை அனுப்பியவர்கள் முன்னிலையிலேயே கிழித்துபோட்டு… என் பவரை இப்போதாவது தெரிஞ்சுக்கோங்கோ…’’ என்று பில்டப் கொடுக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கள்ளச்சாரயத்தை விற்று சாம்ராஜ்யம் அமைப்பவர்களுக்கு உதவும் காக்கிகளை பற்றி என்ன சொல்வது..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாநகரத்தில் சத்தான போலீஸ் ஸ்டேஷனின் பக்கத்தில் செங்காநத்தம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இலை கட்சியின் முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் அவரின் சக கூட்டாளிகள் தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதில் தீவிரமா இறங்கி இருக்காங்களாம். நகரத்தில் பல்வேறு இடங்களில் பட்டப்பகலில் சாராயத்தை கொண்டு வந்து விற்பனை செய்யுறாங்களாம். இதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை வெகுவாக குறைந்து விட்டதாம். இதை போலீசாரும் கண்டுக்கிறதில்லை என்கின்றனர் அந்த பகுதி மக்கள். முன்பெல்லாம் மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த கள்ளச்சாராயம் இப்போது தெருக்களில் வந்து விற்பனை செய்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில காக்கிகள் உடந்தையாக இருந்து வருவதால் கள்ளச்சாராய வியாபாரிகள் சாம்ராஜ்யத்தையே அமைத்து, கல்லா கட்டி வர்றாங்க. இதை உயர் காக்கிகள் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post சேலம்காரர் திட்டத்தால் தேர்தலில் பணத்தை இழந்து தவிக்கும் இலை கட்சி நிர்வாகிகளின் கவலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf party ,Salemkarar ,Lotus Party ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...