×

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் ஒரே இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என். ராஜரத்தினம் கொள்ளுப் பெயரனும் ஜெயந்தி சரவணன் – சரவணன் இணையரின் மகனுமாகிய கருணாரத்தினம் – காவ்யா ஆகியோரின் திருமண நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மணவிழாவை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞரின் தந்தை – என்னுடைய தாத்தா முத்துவேலர். தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வர கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பனராக ராஜரத்தினம் பிள்ளை விளங்கியிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தைச் சார்ந்த வனஜா சுப்பிரமணியம் இரண்டு புதல்வர்களுக்கும், ஒரு புதல்விக்கும் கலைஞர் தலைமையில் தான் திருமணம் நடந்திருக்கிறது என்பதும் வரலாறு.  தலைவருடைய பெயர் கருணாநிதி, அந்தக் கருணா என்ற பாதி எழுத்தை எடுத்து, ராஜரத்தினம் பிள்ளையின் ரத்தினத்தைச் சேர்த்து ‘கருணா ரத்தினம்’ என்று பெயர் சூட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் தான் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பெயரைத் தாங்கியிருக்கும் மணமகன் கருணாரத்தினம், என்னுடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில் எந்த அளவிற்கு அவர் பாசமாக இருந்திருக்கிறார். அவர் அபுதாபி சென்று, ஒரு வருடம்-இரண்டு வருடம் வேலை பார்த்திருப்பார். அதற்குப் பிறகு, என்னால் அங்கு இருக்க முடியாது, எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது, நான் அம்மாவை பார்க்க வேண்டும், அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைவிட நான் என்னுடைய அண்ணன் உதயநிதியைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவர்தான் நம்முடைய கருணா. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்குக் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர். எனவே மணமகள் காவ்யா கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்து நிச்சயமாக வாழ்க்கையை நடத்துவார். அதற்கு நான் கேரண்டி கொடுக்கிறேன். தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் இந்த இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியும். உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நேற்றோடு அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்ற காட்சிகளை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அதற்காக நம்முடைய திருச்சி சிவா தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நம்முடைய அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் தம்பி டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.எனவே தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.  நானும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டு, வழக்கமாக நான் திருமண விழாக்களில் எடுத்துச் சொல்வது போல, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காக – நாட்டிற்கு தொண்டர்களாக” மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக வாழுங்கள் வாழுங்கள் என்று மனதார வாழ்த்தி விடை பெறுகிறேன். உள்ளூர் தமிழனாக இருந்தாலும் உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுகிற இயக்கம் திமுக….

The post தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் ஒரே இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dishagam ,CM. G.K. Stalin ,Chennai ,Dizhagam ,Tamil Nadu ,Principal ,Drawi Progress Corporation ,G.K. Stalin ,CM ,B.C. ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்