×

தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை செய்ய இடையூறு: கேரள அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது.  இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை உள்ளன. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சிமெண்ட் தகடுகள், சின்டெக்ஸ் தொட்டி, பிளாஸ்டிக் குழாய்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தேக்கடி நுழைவுப் பகுதியில் உள்ள கேரள சோதனைச் சாவடியில் அம்மாநில வனத் துறையினர் அதனை வழி மறித்து பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லையென்றும், பெரியாறு புலிகள் காப்பக இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டுமென்று தெரிவித்ததாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உரிய விளக்கமளித்தும் அதை ஏற்க கேரள வனத் துறை மறுத்துள்ளதாகவும், இதனையடுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் அங்கேயே நாட் கணக்கில் நிறுத்தக்கூடிய துர்ப்பாக்கிய சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. கேரள அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கேரள அரசின் செயலை தட்டிக் கேட்பதோடு, இதனை கேரள முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகளைத் தடுத்து நிறுத்தவும், எவ்வித தயக்கமுமின்றி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை செய்ய இடையூறு: கேரள அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thekkady ,OPS ,Kerala ,Chennai ,AIADMK ,O. Panneerselvam ,Mullai Periyar dam ,Tamil Nadu ,
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு