×

ஒன்றிய அரசின் தேசிய மீடியா ஆய்வு மையம் போல மாநில சோஷியல் மீடியா சென்டர் துவங்கினால் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க முடியும்: திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் கோரிக்கை; அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் தேசிய மீடியா ஆய்வு மையம் போல மாநில சோஷியல் மீடியா சென்டர் துவங்கினால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியும் என திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்  கூட்டம் 3 நாட்கள்  நடந்தது. அதன்படி 3ம் நாளான நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அப்போது திருவள்ளூர்  மாவட்ட எஸ்பி வருண்குமார் பேசும்போது, 21ம் நூற்றாண்டில் தமிழக காவல்துறை எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சவாலாக சமூக வலைதளம் கையாளுதல் திகழ்கிறது. தமிழக காவல் துறையில் சமூக வலை தள கண்காணிப்பு மற்றும் கையாளுதல் என்று பிரிவு உள்ளது. ஆனால் இதற்கு பயிற்சி பெற்ற மனித வளம், தொழில் நுட்ப பற்றாகுறை பெருமளவில் உள்ளது. காவல் துறை தலைமையகத்தில் அமைந்துள்ள சோஷியல் மீடியா சென்டர் தற்போது இயங்கி வருகிறது. அதற்காக ஒரு புதிய தலைமை அலுவலகத்தை உருவாக்க ஆணை வழங்க வேண்டும்.சமூக வலைதள கையாளுதல் நிதி என்ற பெயரில் ரூ.20 கோடி வழங்க வேண்டும். இந்த நிதியின் மூலம் அனைத்து காவல் ஆணையரகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள சோஷியல் மீடியா செட்டர்களில் மனிதவள மற்றும் கணினி வன்பொருள், மென்பொருள் மேம்படுத்துதல் ஆகியவற்றை அடையக் கூடும்.ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய மீடியா ஆய்வு மையம் போல, தமிழகத்தில் மாநில மீடியா ஆய்வு சென்டர், சோஷியல் மீடியா சென்டர் துவங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுக்காத்திட முடியும். சமூக வலைதளத்திற்கென்று பயிற்சி பெற்ற காவலர்களை பணியமர்த்தி அவர்களுக்கு சிறப்பு படி வழங்க உத்தரவிட்டால் பெரிய ஊக்கமாக இருக்கும்.2008ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சமூக வலைதளம், மின்னஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறு கருத்துக்களை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றம், பொதுப்படையாக இருப்பதாக கூறி அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதனால், சமூக வலைதளங்களில் தவறான, சர்ச்சைக்குரிய, வன்முறை மற்றும் கலவரம் துண்டும் விதமான கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை சரிவர எடுக்க முடிவதில்லை.குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனையதள குற்றங்கள், ஜாதி, மத, இனக் கலவரங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்தக்கூடிய நபர்களின் சமூக வலைதள பதிவுகளின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க தனி சட்டப்பிரிவு எதுவும் தற்போது இல்லை. இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் இப்படியொரு சட்ட பிரிவை இயற்றினால் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உதவியாய் இருக்கும். இவ்வாறு எஸ்பி வருண்குமார் பேசினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதி மோதல்களுக்கும், மத பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருக்குறதா எல்லோரும் சொன்னீர்கள். அது உள்ளபடியே முழுமையான உண்மை தான். இது நவீன தொழில்நுட்ப யுகம். இந்த தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். சாதி – மத வக்ரம் பிடிச்சவங்க அழிவுக்கு பயன்படுத்தி, சமூகத்துல குழப்பம் ஏற்படுத்த பாக்குறாங்க. இவங்கள முளையிலேயே நாம் களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை போடுறவங்க மேல உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சோஷியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்ற திருவள்ளூர் எஸ்பி. வருண்குமார் கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவோம். ஒன்றிய அரசில் இருப்பதை போல ‘National Media Analytics Center, Social Media Lab’ ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். சோஷியல் மீடியா மூலமா நடக்குற இந்த வன்மங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தனியாக ஒரு ஆலோசனை கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். குழந்தைகளுக்கு எதிரான இணையதள குற்றங்கள், ஜாதி, மத, இனக் கலவரங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்தக்கூடிய நபர்களின் சமூக வலைதள பதிவுகளின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க தனி சட்டப்பிரிவு எதுவும் தற்போது இல்லை….

The post ஒன்றிய அரசின் தேசிய மீடியா ஆய்வு மையம் போல மாநில சோஷியல் மீடியா சென்டர் துவங்கினால் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க முடியும்: திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் கோரிக்கை; அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union government's National Media Research Centre ,Thiruvallur ,SB Varunkumar ,Chennai ,State Social Media Center ,Union Government's ,National Media Research Center ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்